தமிழகம் முழுவதும் டெண்டரில் முறைகேடுகள் இருந்தால் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்


தமிழகம் முழுவதும் டெண்டரில் முறைகேடுகள் இருந்தால் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x
தினத்தந்தி 21 July 2021 10:14 PM GMT (Updated: 21 July 2021 10:14 PM GMT)

தமிழகம் முழுவதும் முறைகேடுகள் நடந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னை,

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி வருமாறு:-

கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கும் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். நடக்கும் பணிகளை விரைவாக முடிக்கவும், தாமதம் உள்ள பணிகளில் காரணத்தை அறியவும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த 4 மாநகராட்சிகளில் பணிகள் விரைவாக நடக்கவில்லை என்ற புகார்களும் வந்துள்ளன. சில அதிகாரிகள் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

இந்தத் துறையில் முன்பு நடந்த பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரடியாக கவர்னரிடம் சென்று புகார் அளித்தார். கோர்ட்டிலும் அதை தாக்கல் செய்திருக்கிறார். அந்தப் புகார்கள் பற்றிய ஆய்வுக்காக ‘விஜிலென்ஸ் கமிஷன்’க்கு அனுப்பப்பட்டுள்ளது. தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் இல்லாத பணிகளைத்தான் இப்போது விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெண்டர் முறைகேடுகள்

கோவையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணி என்ற பெயரில் குளங்களை பாதித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறினார்கள். ஒரு பகுதியில் குளத்தின் கரையை பலப்படுத்தும்போது காங்கிரீட் கரையாக போட்டுள்ளார்கள். அதனால் நிலத்தடி நீர் கிடைக்கவில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதை ஒன்றும் செய்ய முடியாது என்றாலும், இனிமேல் குளங்களின் கரையை பலப்படுத்தும்போது, காங்கிரீட் இல்லாமல் மண் மூலம் பலப்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறோம்.

சென்னை மாநகராட்சியில் ரூ.120 கோடி டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும், டெண்டரில் முறைகேடுகள் இருந்தால் நிச்சயம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி துறை அதிகாரிகள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். துறை வாரியாக என்னென்ன புகார் வந்துள்ளது என்று வெளிப்படையாக கூற முடியாது. அப்படி கூறினால் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். நடவடிக்கை எடுக்கும்போது வெளிப்படையாக தெரிவிக்கப்படும்.

சென்னையில் தேங்கும் மழைநீர்

சென்னையில் மழை நீர் எந்த இடத்திலும் தேங்காத அளவுக்கு, நீரை கொண்டு வந்து நதியில் கலக்கும் வகையில் குழாய் மூலமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகரில் இருக்கும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. ரூ.8 கோடிக்கு மிதக்கும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இந்த பணிகள் நடைபெறுகின்றன.

சென்னையில் எங்கெங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறது என்பதைக் கண்டறிந்து, இனி நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும். கூவம், அடையாறு, பக்கிங்காம் ஆறுகளில் 330 இடங்களுக்கு மேலாக சாக்கடை நீர் கலந்து கொண்டிருக்கிறது. சாக்கடை நீர் கலக்காத அளவுக்கு, தண்ணீரை சுத்தப்படுத்தி வாய்க்கால்களில் விடும் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

அவற்றின் கரையை பலப்படுத்தி அதில் மரங்களை நட்டு இயற்கை சுகாதாரத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ரூ.2,500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அது நடைமுறைபடுத்த இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இதற்கான நிதியை மத்திய அரசிடம் வாங்கி தான் செய்ய வேண்டும். சென்னையில் உள்ள கால்வாய்களில் சாக்கடை நீர் கலக்காத அளவுக்கு புதிய பணிகளை தொடங்கி உள்ளோம்.

முந்தைய ஆட்சியின் பணிகள்

சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்குகிறார்கள். அதன் முதல் திட்டம்தான் சென்னையில் உள்ள ஆறுகளை சீரமைப்பதாகும். அடுத்ததாக, சாக்கடை நீரை முழுமையாக சுத்தப்படுத்தி கொசு இல்லாத அளவுக்கு செய்வதுதான். அதற்கு அடுத்ததாக, ஜல்ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியாகும்.

சிங்கார சென்னை என்பது, மக்களின் அடிப்படை வசதியை முழுமையாக நிறைவேற்றுவதும், பொது இடங்களை நல்ல முறையில் பராமரிப்பதும்தான். ஸ்மார்ட் சிட்டி பணிகள் சென்னையில் முடிந்துவிட்டன.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணம் ஒதுக்காமலேயே, ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாலைகள் போடுவதாக சொல்லி இருந்தார்கள். அதை வரிசைப்படுத்தி, எந்த பணிகள் முக்கியம் என்பதை கண்டறிந்து பணத்தை தயார் செய்து அந்த வேலைகளை செய்யும்படி கூறியுள்ளோம்.

குறிப்பாக, கோவையில், வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிக்கு ரூ.168 கோடி செலவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசு 50 சதவீதம், கடன் 50 சதவீதம் வாங்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதை செய்யவில்லை. இப்போது அதை நாங்கள் செய்கிறோம். எதையும் நிறுத்தவில்லை. ஆனால், பணம் ஒதுக்காமல் டெண்டர் மட்டும் விட்டிருந்தால் அது நிறுத்தப்படும.

புதிய மாநகராட்சிகள்

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. அதில் 80 லட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநகராட்சியிலும் எவ்வளவு வட்டங்கள் இருக்கிறது, அந்த வட்டங்களில் சமஅளவில் வாக்குகள் இருக்கிறதா? என்பதைப் பார்க்க வேண்டும். மாநகராட்சி வார்டில் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வாக்குகள் இருக்க வேண்டும். இதில், ஊருக்கு தகுந்த மாதிரி பிரித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில், புதிய மாநகராட்சி, நகராட்சிகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக எத்தனை மாநகராட்சிகள், நகராட்சிகள் உருவாக்கப்படும் என்பதை முதல்-அமைச்சர்தான் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story