தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 July 2021 7:36 AM GMT (Updated: 22 July 2021 7:36 AM GMT)

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ( தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடன், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வட மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இன்று முதல் நாளை மறுநாள் வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story