பெகாசஸ் உளவு விவகாரம்: கவர்னர் மாளிகையை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் பேரணி


பெகாசஸ் உளவு விவகாரம்: கவர்னர் மாளிகையை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் பேரணி
x
தினத்தந்தி 22 July 2021 8:16 AM GMT (Updated: 22 July 2021 8:16 AM GMT)

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

இஸ்ரேல் நாட்டில் உள்ள ‘என்.எஸ்.ஓ.’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருள் மூலம், 50 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட தனிநபர்களின் செல்போன் எண்கள் உளவுபார்க்கபட்டதாக கூறப்படுகிறது.

அந்த பட்டியலில், இந்தியாவை சேர்ந்த 300-க்கு மேற்பட்டோரின் செல்போன் எண்களும் உள்ளன. அவர்களில் 2 மந்திரிகள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், ஒரு நீதிபதி, 40-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க. ஆகிய கட்சிகளின் எம்.பிக்கள் கூடி ஆலோசனை நடத்தினர். மேலும் இந்த பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெகாசஸ் உளவு விவகாரம்  தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் சார்பில், ஜூலை 22-ம் தேதி(இன்று) அனைத்து மாநிலத்தின் கவர்னர் மாளிகை முன்பும் அடையாளப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சென்னை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே இருந்து தொடங்கி, கவர்னர் மாளிகை வரை செல்லும் பேரணியை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது. பேரணியில் கலந்து கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். போலீசார் ஏற்படுத்திய தடையை மீறி முன்னேறிச் செல்ல காங்கிரஸ் கட்சியினர் முயன்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Next Story