சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு


சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 22 July 2021 9:16 AM GMT (Updated: 22 July 2021 9:16 AM GMT)

சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது, அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின்படி, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் மீதான முதல் வழக்கு செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா, நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த 15 நாள் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் சிவசங்கர் பாபாவை பார்ப்பதற்காக அவரது பக்தர்கள் இன்று காலை முதல் செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பாக திரண்டு இருந்தனர். நீதிமன்றத்தில் இருந்து சிவசங்கர் பாபாவை வெளியே அழைத்து வந்த போது போலீசாருக்கும், சிவசங்கரின் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்திய போலீசார், சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். 

Next Story