8 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளின் பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளம் மூலம் பதிவிறக்கம்


8 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளின் பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளம் மூலம் பதிவிறக்கம்
x
தினத்தந்தி 22 July 2021 7:15 PM GMT (Updated: 22 July 2021 7:15 PM GMT)

8 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளின் பிளஸ்-2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளம் மூலம் பதிவிறக்கம்.

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் நலன் கருதி, பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு பிளஸ்-2 மதிப்பெண் அவசியம் என்பதால், அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிடப்பட்டு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டு இருக்கிறது.

மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களின் தற்காலிக சான்றிதழ் 22-ந்தேதி (நேற்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவ-மாணவிகளின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து நேற்று முதல் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக உயர்கல்வியில் சேர இருக்கும் மாணவ-மாணவிகள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆர்வமுடன் பதிவிறக்கம் செய்தனர். சில அரசு பள்ளிகளில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து வழங்கினர். ஒரு சில பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழோடு மாற்றுச்சான்றிதழ் (டி.சி.), நன்மதிப்பு சான்றிதழ் ஆகியவற்றையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.

சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடிகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை கேட்டு சரிசெய்து கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது. பொதுத்தேர்வு மதிப்பெண் அசல் சான்றிதழ் 2 வாரங்களில் அரசு தேர்வுத்துறை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்தந்தபள்ளிகள் மாணவ-மாணவிகளை நேரில் வரவழைத்து வழங்க இருக்கின்றனர்.

Next Story