நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகனுடன் 28-ந் தேதி கலந்துரையாடல்


நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகனுடன் 28-ந் தேதி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 22 July 2021 8:18 PM GMT (Updated: 22 July 2021 8:18 PM GMT)

நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவாதி மோகனுடன் 28-ந் தேதி கலந்துரையாடல் அமெரிக்க துணை தூதரகம் ஏற்பாடு.

சென்னை,

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் ‘புலம்பெயர்ந்த சாதனையாளர்கள்' என்ற தலைப்பில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் ஜெட் உந்துசக்தி ஆய்வகத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் குழுவின் மேற்பார்வையாளரும், நாசாவின் 2020 செவ்வாய் கிரக திட்டத்துக்கான வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு பணிகளின் மேற்பார்வையாளராகவும் இருந்த இந்திய வம்சாவளி என்ஜினீயர் சுவாதி மோகனுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி 28-ந் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவின் வர்த்தகம், கல்வி, உடல்நலம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் புலம் பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பினை உலகறிய செய்யும் முயற்சி ஆகும்.

இந்தியாவுடனான குடும்ப உறவு, அமெரிக்க மேற்படிப்பு, செவ்வாய் கிரக திட்டத்தில் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு குறித்த கருத்துக்களை சுவாதி மோகன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://statedept.zoomgov.com/webinar/register/WN-Zh6CxJU7QyugRH3gJ9FlEg என்ற இணையதள முகவரி மூலம் பதிவு செய்யலாம்.

https://www.facebook.com/chennai.usconsulate/என்ற சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story