தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 July 2021 12:15 AM GMT (Updated: 23 July 2021 12:15 AM GMT)

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ‘புகையிலை ஒழிப்பு’ குறித்து ஆலோசனை கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீஸ் மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புகையிலை இல்லாத மாநிலமாக தமிழத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதி ஏற்கப்பட்டுள்ளது. குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் அறவே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க, 2 மாத காலங்களில் அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு ‘சீல்’

அந்தவகையில் தமிழகத்தில் எந்த கடையிலாவது குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தார்கள் என்றால், முதலில் நோட்டீஸ் கொடுக்கப்படும். அதன்பிறகும் விற்றால் அபராதம் விதிக்கப்படும். அதனைத்தொடர்ந்து அந்த கடையை மூடி ‘சீல்’ வைக்கப்படும்.

அதிகமாக இளைஞர்களை பாதிக்கும் விஷயம் என்பதால், பள்ளி, கல்லூரி வாயில்கள் முன்பும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் போன்ற பகுதிகளிலும் புகையிலை பொருட்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து உருவ பொம்மைகள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த பகுதிகளில் உள்ள வணிகர்களை ஒன்றிணைத்து இதுபோன்ற ‘புகையிலை பொருட்களை விற்பனை செய்யமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2 கோடியே 5 ஆயிரத்து 367 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 79 ஆயிரத்து 585 கர்ப்பிணிகளுக்கும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 26 மாற்றுத்திறனாளிகளுக்கும், 73 ஆயிரத்து 726 பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார்

மாணவர்களின் நோட்டு புத்தகங்களில் புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறித்து அச்சிட்டு தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 8 ஆண்டுகளில் ரூ.30 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த கால ஆட்சியில் இருந்த அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பது என்பது உண்மை. அது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. இனி அதுபோல் இருக்க கூடாது என்பதற்காக தான் அதனை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புகையிலை தொடர்பான புகார்கள் இருந்தால், பொதுமக்கள் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

போதை பொருட்கள் விற்கப்படுவதை அறிந்த சிலர் என்னுடைய செல்போன் எண்ணிற்கு, அவை எங்கு கிடைக்கும் என்றெல்லாம் தகவல்கள் அனுப்பியுள்ளனர். மேலும், அதற்கு யார் மொத்த விற்பனையாளர் என்ற தகவல்களையும் அனுப்பியுள்ளனர். அந்த தகவல்கள் போலீசாருக்கு அனுப்பப்படும். புகையிலை பொருட்கள், பெங்களூருவில் இருந்து, காய்கறி வாகனங்கள் மூலம் வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய முடியாது. ஆனால் தீவிரமாக ஈடுபட்டால் எந்த வாகனத்தில் வருகிறது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

புகையிலை விற்பனையை முழுமையாக தடுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழும், விருதுகளும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story