அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும் ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு, நீதிபதிகள் உத்தரவு


அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும் ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு, நீதிபதிகள் உத்தரவு
x
தினத்தந்தி 23 July 2021 1:07 AM GMT (Updated: 23 July 2021 1:07 AM GMT)

நுழைவு வரியை எதிர்த்த வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி, நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை,

இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' என்ற சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடும் கண்டனக் கருத்துகளை தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் விஜய் மேல்முறையீடு செய்தார். ‘‘தனி நீதிபதி உத்தரவின் அசல் ஆவணம் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், ஐகோர்ட்டு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட உத்தரவு நகலின்படி, மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்று, எண் வழங்க ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்க வேண்டும்

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில் ஆஜரானவக்கீல், ‘‘தனி நீதிபதி உத்தரவு ஆவணம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கிற்கு எண் வழங்கும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டனர். பின்னர், அபராத தொகையை செலுத்தி விட்டு, வருகிற 28-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளதால், இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 26-ந்தேதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதற்கு நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கிற்கு எண் வழங்கும் நடைமுறை முடிந்ததும், விசாரணைக்கு வழக்கை பட்டியிலிட ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Next Story