அண்ணாசாலையில் வணிக வளாகத்தின் 3-வது மாடியில் பயங்கர தீ விபத்து 6 மாத கைக்குழந்தை உள்பட 10 பேர் பத்திரமாக மீட்பு


அண்ணாசாலையில் வணிக வளாகத்தின் 3-வது மாடியில் பயங்கர தீ விபத்து 6 மாத கைக்குழந்தை உள்பட 10 பேர் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 23 July 2021 1:13 AM GMT (Updated: 23 July 2021 1:13 AM GMT)

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, 6 மாத கைக்குழந்தை உள்பட 10 பேர் ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை,

சென்னை அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகில் 5 மாடிகள் கொண்ட தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு, டீக்கடை, ஜூஸ் கடை, வங்கி, உள்பட பல நிறுவனங்கள் உள்ளது. அந்தவகையில் 3-வது மாடியில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனமும், 4-வது மாடியில் கல்வி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில், 3-வது மாடியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதைக்கண்ட வணிக வளாகத்தில் வேலை பார்த்து வந்த காவலாளி உடனடியாக, தரை தளத்தில் இருந்த மின் இணைப்பை துண்டித்தார். தொடர்ந்து அதிகளவில் புகை வெளியேறியதால், அவர் கூச்சலிட்டு கொண்டே வெளியே ஓடிவந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் வணிக வளாகம் முன்பு திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீ விபத்து

இதற்கிடையில், 3-வது மாடியில் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அங்கிருந்த பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் பீதியில் அலறினர். தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால், அவர்களால், வெளியே செல்ல முடியவில்லை. இதனால், அங்கிருந்த ஜன்னல் அருகில் வந்து நின்று ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்ற அபய குரல் எழுப்பினர். மேலும் அந்த கரும்புகை 4-வது மாடிக்கு பரவ ஆரம்பித்ததால், அங்கிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயத்தில் அலறியடித்து, பின்பக்க பகுதியில் உள்ள மாடிப்படி வழியே, மளமளவென கீழே இறங்கினர்.

தகவலின் பேரில், திருவல்லிக்கேணி, எழும்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்துக்கு வந்து நின்றது. மேலும் எழும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ‘ஸ்கை லிப்ட்’ ராட்சத வாகனமும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், 3-வது மாடியில் ஜன்னலின் ஓரத்தில் நின்று அபய குரல் எழும்பியவர்களை முதலில் மீட்பதற்காக, தீயணைப்பு வீரர்கள் ‘ஸ்கை லிப்ட்’ ராட்சத வாகனத்தில் ஏறி 3-வது தளத்துக்கு சென்றனர்.

6 மாத குழந்தை மீட்பு

அங்கு ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்த 6 மாத கைக்குழந்தை உள்பட 8 பெண்கள், மாற்றுத்திறனாளி உள்பட 2 ஆண்கள் என 10 பேரை பத்திரமாக கீழே இறக்கினர். இதற்கிடையில் அந்த பகுதியில் 8 ஆம்புலன்சு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தது. இதையடுத்து உடனடியாக அவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், கட்டிடத்திற்குள், யாரேனும் சிக்கி உள்ளார்களா என ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு துறையினர் கண்காணித்தவாரே, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், உள்ளே இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் தீப்பிடித்து வெடித்து சிதறியதால், மேலும் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் அண்ணாசாலை பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் வேப்பேரி உள்பட 13 தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அண்ணாசாலையை நோக்கி படையெடுத்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது, அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் காலியாக கூடிய சூழ்நிலை உருவானது. சுதாரித்து கொண்ட தீயணைப்பு வீரர்கள் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்தனர்.

தண்ணீர் லாரிகளில் சப்ளை

முதலில் 7 லாரிகளில் தண்ணீர் வந்த நிலையில், அந்த தண்ணீரும் காலியானதால், மீண்டும் 6 லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. பின்னர் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து தீவிபத்து நடந்த 3-வது மாடிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், யாரேனும் உள்ளே சிக்கி இருக்கிறார்களா என சோதனை நடத்தினர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

மேலும், இந்த விபத்தில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்த அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தால் அண்ணாசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story