மோகன் பாகவத் மதுரை வருகை மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? பா.ஜ.க. தலைவர் கண்டனம்


மோகன் பாகவத் மதுரை வருகை மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? பா.ஜ.க. தலைவர் கண்டனம்
x
தினத்தந்தி 23 July 2021 10:20 PM GMT (Updated: 23 July 2021 10:20 PM GMT)

மோகன் பாகவத் மதுரை வருகை மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதா? பா.ஜ.க. தலைவர் கண்டனம்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. ஆங்காங்கே ஆலோசனை கூட்டங்களிலும் பங்கேற்பார். இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மோகன் பாகவத் மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26 வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்கு உள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்கென மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது.

யார்? யார்? வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா?. பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும் போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா?.

தி.மு.க.வின் சாமானியத் தலைவர்கள் சென்றால் கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறது. ஆனால் அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம் போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா?

தமிழக அரசு நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால் உதவி ஆணையர் சண்முகம் பணி விடுவிப்பு ரத்து செய்யபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story