கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி


கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்குவதில் காலதாமதம் ஏன்? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி
x
தினத்தந்தி 23 July 2021 11:11 PM GMT (Updated: 2021-07-24T04:41:42+05:30)

கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு முறையாக வழங்குவதில் தொடர் காலதாமதம் ஏன் என்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

சென்னை,

நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் உயர்த்தி வழங்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். கொரோனா தடுப்பூசிகளை முறையாக மாநிலங்களுக்கு வழங்குவதில் ஏற்படுகின்ற தொடர் காலதாமதம் குறித்து அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனவா அல்லது அது குறித்து ஏதேனும் அறிக்கை தயாரித்துள்ளனவா?. எனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைகளை எதனடிப்படையில் கணக்கிடப்படுகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை அடைய மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு என்ன என்பதனையும் தெரியப்படுத்தவும். தடுப்பூசிகளை வாங்குவதில் மற்றும் அதனை வினியோகிப்பதில் அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்பதனையும் தெரியப்படுத்தவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள்...

இதற்கு மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘கொரோனா தடுப்பூசிகள் தயாராவதற்கு முன்னதாகவே குளிர் சங்கிலி கட்டமைப்பு குறித்து ஆய்வு மேற்கோள்ளப்பட்டது. அதனடிப்படையில் அக்கட்டமைப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையின் அடிப்படையிலும், தடுப்பூசிகளை வீணடிக்காமலும் முறையாக கையாள்வதன் அடிப்படையிலும் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது.

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு என்று எதுவும் தற்போது வரை மத்திய அரசால் நிர்ணயிக்கப்படவில்லை, எனினும் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிகளை கொள்முதல் மற்றும் வினியோகம் செய்வதில் எந்த பிரச்சினைகளையும் மத்திய அரசு சந்திக்கவில்லை' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

காலதாமதம் ஏன்?

மத்திய அரசு அளித்துள்ள பதில்களின் அடிப்படையில், அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்தே தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது என்று மத்திய அரசு கூறுகையில், பிறகு ஏன் தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைவாக இருக்கும் மற்ற மாநிலங்களுக்கு அதிகளவில் தடுப்பூசி வழங்கப்பட்டது?. தடுப்பூசிகள் கொள்முதல் மற்றும் வினியோகம் செய்வதில் எந்தப் பிரச்சினைகளையும் மத்திய அரசு சந்திக்கவில்லை எனில் பிறகு ஏன் மாநிலங்களுக்கு உரிய நேரத்திலும், போதிய அளவிலும் தடுப்பூசிகளை வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது?.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story