2014-15 நிதியாண்டுக்கு ரூ.3.86 கோடி வரி: கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்குக்கு வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும்


2014-15 நிதியாண்டுக்கு ரூ.3.86 கோடி வரி: கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்குக்கு வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 July 2021 11:15 PM GMT (Updated: 23 July 2021 11:15 PM GMT)

2014-15-ம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.3.86 கோடியை செலுத்த அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்குக்கு வருமான வரித்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை முட்டுக்காட்டில் உள்ள சொத்தை 2015-ம் ஆண்டு விற்பனை செய்த வகையில் ரொக்கமாக பெறப்பட்ட ரூ.6 கோடியே 38 லட்சத்தை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் இருவரும் கடந்த 2014-2015 மற்றும் 2015-2016-ம் ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்வதாக அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

வருமான வரி

அதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட்டு தனி நீதிபதி சமீபத்தில் தள்ளுபடி செய்தார்.

அதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்தநிலையில், 2014-2015-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை மறுமதிப்பீடு செய்த வகையில், ரூ.3 கோடியே 86 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு வருமான வரித்துறை கடந்த 15-ந் தேதி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

பதில் மனு

அதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வரி செலுத்தும்படி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக தனது தரப்பு விளக்கத்தை கேட்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், வருமான வரித்துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையைவருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story