வடசென்னை அனல்மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு


வடசென்னை அனல்மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2021 10:55 PM GMT (Updated: 24 July 2021 10:55 PM GMT)

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார்.

சென்னை,

மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

3-வது யூனிட்டில் 800 மெகாவாட் மற்றும் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் சார்பில் 2 யூனிட்டுகளில் தலா 800 வீதம் 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டுமானப்பணி நடந்து வருகிறது.

இந்த மின் உற்பத்தி பணிகளுக்காக ஒடிசா மாநிலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

அமைச்சர் ஆய்வு

நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் நிலையில், நிலக்கரி எரியூட்டப்பட்ட பின் கொதிகலன் குழாயில் இருந்து வெளிவரும் சாம்பல் நீரானது கழிவு சாம்பல் குளத்தில் சேமிக்கப்படுகிறது. மேலும் எரியூட்டிய நேரத்தில் கிடைக்கக்கூடிய உலர் சாம்பல் நாள்தோறும் லாரிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. கடந்த சில மாதங்களாக 1,830 மெகாவாட் மின் உற்பத்தி முழுவதுமாக உற்பத்தி செய்யப்படாமல் பாதிக்கப்பட்டு வந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், மின்உற்பத்தி பிரிவு, நிலக்கரி அறவை உலர் சாம்பல் பிரிவு மற்றும் கொதிகலன் பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

தங்கு தடையின்றி மின்சாரம்

அனல்மின் நிலையம் முழுவதும் இருந்த சேறும் சகதியையும் பொருட்படுத்தாமல் நீண்ட தூரம் நடந்து சென்று அதிகாரியிடம் விளக்கத்தை கேட்டறிந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, “தமிழத்தில் மின் உற்பத்தி முழுமையாக நடைபெற்று தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் செயல்பட்டு வருவதாக” தெரிவித்தார்.

பின்னர் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கப்பலில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ்லக்கானி, அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் சரவணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண் இயக்குனர் சண்முகம் உள்பட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story