கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி


கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x
தினத்தந்தி 25 July 2021 12:08 AM GMT (Updated: 25 July 2021 12:08 AM GMT)

கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் தூய்மை நிறைந்த இடமாக மாற்றவும், நந்தவனம், திருத்தேர் பழுதடைந்தால் அவற்றை சரி செய்யும் பணியும், கோவில் தெப்பக்குளங்களில் தண்ணீர் விடும் முயற்சிகள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக மாவட்டந்தோறும் ஆய்வு நடக்கிறது. எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு, வருமானம் தரக்கூடிய கோவில்கள், வருமானம் இல்லாத கோவில்கள் என்ற நிலையை மாற்றி அனைத்து கோவில்களிலும் ஒரு கால பூஜை நடத்தப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பொற்கால ஆட்சி

அதன்படி இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பணிகள் நடைபெறும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி என்பது ஆன்மிக மக்களுக்கு பொற்கால ஆட்சி என்று இருக்கும் அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை பணிகள் நடக்கும். அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்தாலும் தவறு தான். இந்த ஆட்சியை பொறுத்தவரை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

நல்ல வசதி படைத்தவர்கள், கோவில் இடங்களை தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் மீது முதல்கட்டமாக தீவிர நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோவில் நிலங்கள் குறித்து தினமும் 2 இடங்களிலாவது ஆக்கிரமிப்புகளை இந்து சமய அறநிலையத் துறையினர் அகற்றி வருகிறார்கள். கடந்த 75 நாட்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றி இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தில் படிப்படியாக சிறிய கோவில்களில் நியமிக்கப்படும் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தவும், கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story