ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உயர்நிலை விழிப்புணர்வு-கண்காணிப்பு குழு திருத்தி அமைப்பு தமிழக அரசு உத்தரவு


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உயர்நிலை விழிப்புணர்வு-கண்காணிப்பு குழு திருத்தி அமைப்பு தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2021 12:20 AM GMT (Updated: 25 July 2021 12:20 AM GMT)

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உயர்நிலை விழிப்புணர்வு- கண்காணிப்பு குழுவை திருத்தி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தவகையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இக்குழு திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கொண்ட உயர்நிலை விழிப்புணர்வு- கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

குழு உறுப்பினர்கள் நியமனம்

முதல்-அமைச்சர் தலைமையிலான இக்குழுவில் நிதித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் என்.சந்திரசேகர், பெ.செல்வராசு, மக்களவை எம்.பி.க்கள் ஜி.செல்வம், டி.ரவிகுமார், ஏ.ராஜா, தொல்.திருமாவளவன், எம்.செல்வராஜ், தனுஷ் எம்.குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதவிர 43 எம்.எல்.ஏ.க்களும், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்பட 5 பேர் அலுவல் சார் உறுப்பினர்களாகவும், ஒருவர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஆய்வுக்கூட்டம்

இந்த குழு ஆண்டுக்கு இருமுறை (ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்) கூட்டப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் அதுதொடர்பான பணிகளை ஆய்வு செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story