பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார்: பா.ஜ.க.வை எதிா்க்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் சீமான் அறிக்கை


பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார்: பா.ஜ.க.வை எதிா்க்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் சீமான் அறிக்கை
x
தினத்தந்தி 25 July 2021 10:58 PM GMT (Updated: 25 July 2021 10:58 PM GMT)

பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார்: பா.ஜ.க.வை எதிா்க்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் சீமான் அறிக்கை.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தனித்துவ வலிமையில்லாத நிலையில் அ.தி.மு.க.வின் தோளேறி பின்வாசல் வழியாக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கத் துடிக்கும் பா.ஜ.க.வை முதன்மை எதிரியாகக் கட்டமைத்து, அதனையொட்டிய பரப்புரைகளை முன்வைத்து, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தி.மு.க., இன்றைக்கு பா.ஜ.க. வகுத்த பாதையில் செல்வதும், அவர்களை மென்மையானப்போக்கோடு அணுகுவதும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

பா.ஜ.க.வை வலிமை கொண்டு மூர்க்கமாக எதிர்த்து அரசியல் செய்யாது, பா.ஜ.க. செய்யும் அரசியலுக்குள் கரைந்துபோகும் தி.மு.க.வின் செயல்பாடுகள் யாவும் வழமையான பிழைப்புவாதமாகும். இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் கூறப்பட்ட ‘ஒன்றியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத் தாண்டி தி.மு.க. அரசு, பா.ஜ.க.வை எதிர்த்து வீரியமாய்ச் செய்திட்ட அரசியலென்ன?. பா.ஜ.க.வை பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆகவே, இனிமேலாவது, ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியைப் போல பா.ஜ.க.வை எதிர்க்க முன்வர வேண்டும், நாசகாரத் திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும், தமிழ்நாட்டைப் பேணிக்காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

Next Story