தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 26 July 2021 12:26 AM GMT (Updated: 26 July 2021 12:26 AM GMT)

உலகத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நேற்று காலை நலத்திட்ட உதவிகளை வழங்கி முடித்தபிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்த முக கவசம்தான் முழுமையான தீர்வு. கடந்த ஆட்சி காலத்தில், தி.மு.க சார்பில் சட்டமன்றத்தில் முக கவசங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. பின்னர் வருவாய்த்துறை சார்பில் மிகவும் விலை குறைந்த முக கவசம் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த முக கவசங்களால் எவ்வித பயனும் இல்லை.

அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.5 கோடி அளவில் சி.எஸ்.ஆர். நிதி வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி போடுகிற பணி வருகிற புதன்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடங்கப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவம்

அதன்பிறகு வியாழக்கிழமையன்று, அனுமதிக்கப்பட்ட அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவச தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. அதேபோல் தொழில் நிறுவனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுடன் ஒருங்கிணைந்து, தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் உழியர்களுக்கு சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்புடன் தடுப்பூசிகள் செலுத்தும்.

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் உலகத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களையும் பரிசோதனை செய்து, அவர்களுக்கு எத்தகையை நோய் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, நோய் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்ப்பதும், இலவசமாக மருந்துகளை அளிப்பதுமான திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கிவைக்க இருக்கிறார்.

அதற்காக ஓரிரு நாட்களில் கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, எந்தெந்த பகுதிகளில் அத்திட்டத்தைத் தொடங்கலாம் என்று முடிவெடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story