கொரோனாவால் பலியான டாக்டர் சைமன் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் குடும்பத்தினர் அஞ்சலி


கொரோனாவால் பலியான டாக்டர் சைமன் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் குடும்பத்தினர் அஞ்சலி
x
தினத்தந்தி 26 July 2021 1:07 AM GMT (Updated: 26 July 2021 1:07 AM GMT)

டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் வேலங்காடு மயானத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் 15 மாதங்களுக்கு பின்னர் மறு அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர்மல்க உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை,

பிரபல நரம்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் 19-ந்தேதி கொரோனாவால் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் டாக்டர் இவர் ஆவார்.

இவரது உடல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநகராட்சியின் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கடைசி விருப்பம்

ஆனால் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் ‘நான் மரணம் அடைந்தால் என்னுடைய உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்’ என்று தனது கடைசி ஆசையை அவரது மனைவி ஆனந்தியிடம் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து மறு அடக்கம் செய்ய அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆனந்தி தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. ஆனால் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, இந்த தீர்ப்புக்கு தடையாக அமைந்தது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு ஆனந்தி கோரிக்கை மனு அளித்ததால், மு.க.ஸ்டாலின் உத்தரவால் மேல்முறையீட்டு மனு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. இதன் மூலம் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடலை மறு அடக்கம் செய்வதில் இருந்த தடை நீங்கியது.

மறு அடக்கம்

இந்தநிலையில் அவரது உடல் மறுஅடக்கம் நேற்று நடைபெற்றது. டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகள், டாக்டர் சைமன் ஹெர்குலசின் குடும்பத்தினர் முன்னிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு வேலங்காடு மயானத்தில் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் சந்தன பெட்டியில் வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் காலை 7 மணிக்கு அருட்தந்தை ஷைனிஸ் அடிகளார் பிரார்த்தனையுடன் கிறிஸ்தவ முறைப்படி மறுஅடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு மனைவி ஆனந்தி, மகள் டாக்டர் ஷைமி ஹெர்குலஸ், மகன் ஆண்டன் ஹெர்குலஸ் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் 15 மாதங்களுக்கு பின்னர் மறுஅடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story