'டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனையை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம்' கே.எஸ்.அழகிரி பேட்டி


டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனையை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 26 July 2021 1:13 AM GMT (Updated: 26 July 2021 1:13 AM GMT)

டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனையை தமிழ்நாடு காங்கிரஸ் கொள்கை ரீதியாக எதிர்க்கிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் சச்சிதானந்தம், ஈரோடு மாநகர மண்டலத் தலைவர் சாம்ராட் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் த.மா.கா. கட்சியை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் ஒடிசா மாநில பொறுப்பாளர் டாக்டர் செல்லக்குமார் எம்.பி., சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநிலச் செயலாளர் அடையாறு பாஸ்கர், மாநில பொதுச்செயலாளர் காண்டீபன், மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் மற்றும் கொட்டிவாக்கம் முருகன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பழிவாங்கும் நடவடிக்கை இல்லை

நிகழ்ச்சிக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. அவர் தாங்கள் ஊழல் செய்யவில்லை என்று கூற வேண்டும் அல்லது ஊழல் செய்தோம் என்று கூற வேண்டும். அதைவிடுத்து, பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறுவது சரியல்ல.

பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அந்த நிறுவனமே அரசாங்கங்களுக்கு தாங்கள் கருவியை விற்பனை செய்ததாக தெரிவித்திருக்கிறது. இந்தியாவுக்கும் அந்தக் கருவியை விற்றிருக்கிறோம் என்று கூறியிருக்கிறது. இதை பிரதமர் மோடி, அமித்ஷா மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

கொள்கை ரீதியாக எதிர்ப்பு

லாட்டரி சீட்டு விற்பனை, டாஸ்மாக் போன்றவை மக்களுக்குத் தீங்கு விளைவிப்பவை. இவற்றின் மூலம் வருமானம் பெற்று அரசாங்கத்தை நடத்துவது ஏற்புடையது அல்ல. இதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது. கொள்கை ரீதியாக காங்கிரஸ் கட்சி இதை எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story