நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் தொகுப்பை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் 31-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்


நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் தொகுப்பை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் 31-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்
x
தினத்தந்தி 26 July 2021 2:17 AM GMT (Updated: 26 July 2021 2:17 AM GMT)

நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் வரும் 31-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும்வகையில் கடந்த மே 15-ந் தேதியில் இருந்து, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஜூன் 15-ந்தேதி முதல் ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டுவருகிறது.

மேலும், இக்குடும்பங்களுக்கு முழு ஊரடங்கின்போது தேவைப்படும் மளிகைப்பொருட்கள் வழங்கும்பொருட்டு 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை ஜூன் 15-ந் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

31-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்

99 சதவீதத்துக்கும் மேலான அட்டைதாரர்கள் தற்போது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பை பெற்றுள்ள நிலையில், இதுவரை பெறாதோர் 31-7-2021-க்குள் அவர்களுக்குரிய பொது வினியோகத்திட்ட அங்காடிகளில் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் 31-7-2021-க்குள் பெற இயலாத, 15-6-2021 அன்றைய தேதியில் தகுதியுடன் இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1-8-2021 முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாயவிலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதிபெற்று அதன்பின் அவர்களுக்கு உரிய நியாயவிலைக் கடையில் இருந்தே வழங்கும்முறை பின்பற்றப்படும்.

புதிய குடும்ப அட்டைதாரர்கள்

மே மாதம் 10-ந் தேதி முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் மனுதாரர்களுக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இக்குடும்ப அட்டைதாரர்கள் 1-8-2021 முதல் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதனால், புதிய குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து இன்றியமையாப் பொருட்களை தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம்.

அட்டைதாரர்கள் அனைவரும் கொரோனா நோய்த்தொற்று தீரும்வரை முககவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி, அவசியத் தேவையின்றிப் பொதுவெளிக்கு வராமல் தங்களையும், சமூகத்தையும் காத்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story