கொரோனா தாக்கம் எதிரொலி: மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு பள்ளிகள்...


கொரோனா தாக்கம் எதிரொலி: மாணவர் சேர்க்கையில் அசத்தும் அரசு பள்ளிகள்...
x
தினத்தந்தி 27 July 2021 12:24 AM GMT (Updated: 27 July 2021 12:24 AM GMT)

மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகள் அசத்தி வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பலரும் பொருளாதார ரீதியாக அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளனர்.

மீண்டு எழுந்துவரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்தது. இதன் காரணமாக மேலும் பொருளாதார ரீதியாக பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. பொதுத்தேர்வு இல்லாமலேயே 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை அதிகரிப்புக்கு காரணம், அரசு பள்ளி ஆசிரியர்களின் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. பல கிராமங்களில் பள்ளி ஆசிரியர்கள் ஒலிபெருக்கி மூலமும், வீடு வீடாக சென்றும், ‘‘மாணவர்களின் படிப்புக்கும், கல்வித்திறன் மேம்பாட்டுக்கும் நாங்கள் கேரண்டி’’ என கேரண்டி கார்டும் பெற்றோர்களிடம் கொடுத்து உறுதி அளித்து இருக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் தற்போது அரசு பள்ளிகளில் சேர்வதற்கு, கொரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இதில் பெற்றோர் பலர் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களது குழந்தைகளை தொடர்ந்து கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். 
மேலும் அரசு பள்ளிகளில் இலவச கல்வி முறையோடு, தனியார் பள்ளிகளுக்கு நிகராகவும் மாறியுள்ளன. அரசின் பல்வேறு உதவிகள் அனைத்தும் கிடைப்பதாலும் தற்போது இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story