கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய நகைகள் மூலம் வருவாய் ஈட்ட முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்


கோவில்களுக்கு பக்தர்கள் வழங்கிய நகைகள் மூலம் வருவாய் ஈட்ட முடிவு அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 3:59 AM GMT (Updated: 27 July 2021 3:59 AM GMT)

கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதனை வங்கியில் ‘டெபாசிட்’ செய்து வருவாய் ஈட்டப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஆன்மிகம், இறைபக்தியில் அதிக நாட்டம் கொண்ட பி.கே.சேகர்பாபு இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், புகழ்பெற்ற பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பழமையான கோவில்களை புனரமைப்பது, கோவில் நிலங்களை மீட்பது, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது போன்ற பணிகளில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனிக்கவனம் செலுத்தி உள்ளார்.

எனவே அவர், மாவட்டவாரியாக கோவில்களில் ஆய்வு பணியை மேற்கொண்டு அதிகாரிகளை அறிவுறுத்தி வருகிறார். மேலும் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய நகைகளை தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, அதன் மூலம் வருவாய் ஈட்டி கோவில் திருப்பணிகளை மேற்கொள்ளும் புதிய திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

பக்தர்கள் காணிக்கை

இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

திருக்கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் வழங்கிய தங்க நகைகளில் தெய்வங்களுக்கு தேவையான நகைகளை தவிர்த்து மற்ற நகைகளில் முத்து, விலையுயர்ந்த கற்கள் எடுக்கப்பட்டு நகைகள் மட்டும் தனியாக பிரித்தெடுக்கப்படும்.

பின்னர் அந்த நகைகள் மத்திய அரசின் நிறுவனமான மும்பையில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு இந்த நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி அதனை கோவிலில் வைக்கப்பட வேண்டும். இதுதான் நடைமுறை ஆகும்.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நகைகள் எந்தவித பயன்பாடு இல்லாமலும், பயன்படுத்தாமலும் அப்படியே இருக்கிறது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அவர், துறைச் சார்ந்த ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்தி, இதுகுறித்து பரிசீலித்து தங்க நகைகளை பிஸ்கெட்டுகளாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாற்றப்படும் தங்க பிஸ்கெட்டுகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தங்க வைப்புநிதியில் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

2 ஆயிரம் கிலோ தங்கநகைகளை இப்படி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி ‘டெபாசிட்’ செய்தால் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.20 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும். இந்த நிதி மூலம் திருக்கோவில்கள் வளர்ச்சி பணி, கோவில் புனரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

400 கோவில்களில்...

இந்த பணியை உடனடியாக தொடங்க வேண்டும். கோவில்களில் உள்ள நகைகளை முறையாக கணக்கெடுத்து வெளிப்படைத்தன்மையுடன் எந்தவித தவறுக்கும் இடம் தராமல் இப்பணியை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.

தற்போது தமிழகத்தில் உள்ள முதல், 2 மற்றும் 3-ம் நிலையில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கோவில்களில் தங்கநகைகள் இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி விரைவில் இந்த நகைகள் தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி, வங்கியில் ‘டெபாசிட்’ செய்யப்படும். இதன் மூலம் 2.5 சதவீதம் வட்டியாக கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story