போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை மு.க.ஸ்டாலின் வழங்கினார்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 27 July 2021 4:08 AM GMT (Updated: 27 July 2021 4:08 AM GMT)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 968 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு வழங்கினார்.

இதேபோல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 62 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்-அமைச்சரின் எண்ணம்

குற்ற நிகழ்வுகளில் புலன் விசாரணை செய்யவும், குற்றச் செயல்களுக்குத் தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டுமின்றி, குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கும் துறையாகவும் காவல்துறை செயல்படவேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் எண்ணமாகும்.

அந்த உயரிய குறிக்கோள்களை நிறைவேற்ற, காவல் துறையைப் பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு 968 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 968 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களில், தாலுகா காவல் நிலையங்களுக்கு 660 நபர்களும், ஆயுதப்படைக்கு 225 நபர்களும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு 39 நபர்களும் தேர்வாகியுள்ளனர். இதில் 281 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர். இவர்கள் தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் ஓர் ஆண்டுகாலம் அடிப்படைப் பயற்சி பெறுவார்கள்.

ஆய்வு கூடங்களில் பணி

குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப் பொருள்களை அறிவியல் ஆய்வு மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க உதவுவதே தடய அறிவியல் துறையின் இளநிலை அறிவியல் அலுவலர்களின் முக்கியப் பணியாகும். இப்பணிக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 62 இளநிலை அறிவியல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாநகரங்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக் கூடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சியின்போது, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. செ.சைலேந்திர பாபு, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (நிர்வாகம்) எம்.ரவி, தடய அறிவியல் துறை இயக்குனர் மா.சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story