சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தவிர வாடகைதாரர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு


சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தவிர வாடகைதாரர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 July 2021 1:24 AM GMT (Updated: 28 July 2021 1:24 AM GMT)

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தவிர, வாடகைதாரர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட மற்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளை வரும் ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும்வகையில் கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கோர்ட்டுகள் மூடப்பட்டன. அவசர வழக்குகள் மட்டும் ஆன்லைன் மூலம் விசாரிக்கப்பட்டன.

அதேநேரம் ஊரடங்கை கருத்தில்கொண்டு, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சட்டவிரோத கட்டிடங்களை இடிப்பது, வாடகை வீடுகளை காலி செய்வது, வாடகை பாக்கியை வசூலிப்பது, வாடகை வீட்டில் இருந்து வாடகைதாரர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. இதுபோன்ற வழக்குகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீட்டித்து உத்தரவிட்டது.

விருப்பம் இல்லை

இதுதொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு உரிய கால இடைவெளியில் விசாரணைக்கு வரும்போது, இந்த உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டு வந்தன. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இந்த இடைக்கால உத்தரவுகளை மேலும் நீட்டிக்க விரும்பவில்லை. எனவே ஜூலை 15-ந்தேதிக்குப் பின், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கட்டிடங்களை இடிக்கவும், தொகைகளை வசூலிக்கவும் அரசுக்குத் தடை எதுவும் இல்லை. அதேபோல இடைக்கால தடைகளும் நீட்டிக்கப்படாது என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வக்கீல்கள் கோரிக்கை

அப்போது ஆஜரான வக்கீல்கள், கொரோனா ஊரடங்கு உத்தரவுகளின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கீழ்கோர்ட்டுகள் முழுமையாக செயல்படத் தொடங்கவில்லை. ஜாமீன் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இடைக்கால உத்தரவுகளை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தவிர்த்து மற்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளை வருகிற ஆகஸ்டு 31-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Next Story