முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கு: சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை


முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கு: சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை
x
தினத்தந்தி 28 July 2021 1:28 AM GMT (Updated: 28 July 2021 1:28 AM GMT)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கில் சென்னையில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் தம்பி மீது கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்துள்ளதாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட 26 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, மேற்கு மாம்பலம் கோகுலம் காலனியில் உள்ள டெடி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனி அலுவலகம், பெருங்களத்தூரில் உள்ள அவரது உதவியாளர் பாலசுப்பிரமணியனின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அடுத்து கரூரில் 22 இடங்களில் சோதனை நடந்தது.

அங்குள்ள விஜயபாஸ்கரின் வீடு, அவரது தாயார் வீடு, தம்பி வீடு உள்ளிட்ட உறவினர்களின் வீடுகள், அவருக்கு சொந்தமான சாயப்பட்டறை அலுவலகம், கல்குவாரி அலுவலகம் மற்றும் அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனி போன்ற இடங்கள் சோதனை நடந்த இடங்களில் முக்கியமானவை ஆகும்.

மீண்டும் சோதனை

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள டெடி இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியில் ஏற்கனவே சோதனை போடப்பட்டது. அந்த கம்பெனியின் ஆலோசகராக செயல்பட்ட ரவிக்குமார் என்பவர் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கிறார். அங்கு ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. அவரது அலுவலகம் அண்ணாநகர், 6-வது அவென்யூவில் இருக்கும், சாம் அடுக்குமாடி குடியிருப்பு 3-வது மாடியில் உள்ளது. அந்த அலுவலகத்தில் நேற்று திடீரென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். காலை முதல் மாலை வரை இந்த சோதனை நீடித்தது.

ஏற்கனவே 26 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பாக விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், தனக்கு சொந்த வீடு ஏதும் இல்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களுக்கு உரிய கணக்கு விவரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்

இதற்கிடையில் ரவிக்குமாரின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் 3 லேப்டாப்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை விஜயபாஸ்கர் மீதான வழக்கிற்கு தொடர்பு உள்ளதா, என்று விசாரணை நடப்பதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது.

Next Story