வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை: மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி


வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை: மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி
x
தினத்தந்தி 28 July 2021 1:31 AM GMT (Updated: 28 July 2021 1:31 AM GMT)

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 26-2-2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது கோரிக்கையை ஏற்று இதற்கான சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்த முந்தைய ஆட்சியின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை தயாரித்தது முதல் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதல் பெற்று அரசாணை பிறப்பிக்கப்படும் வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முந்தைய அரசின் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் பா.ம.க. சார்பில் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

10.5 சதவீதம் இடஒதுக்கீடு

வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் அது நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாலும், தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளும் வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தின் அடிப்படையில்தான் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும், இனி அறிவிக்கப்படவுள்ள மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் 10.50 சதவீதம் இடங்கள் வன்னியர் சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.

6 ஆயிரம் மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் வன்னியர் மாணவர்களுக்கு 630 இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். கல்வியில் மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இது பெருமளவில் பயனளிக்கும்.

வாழ்நாள் முழுவதும் தொடரும்

வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும். ஓராண்டில் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் வன்னியர்களுக்கு குறைந்தது 10,500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதுதான் எனது இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதை எட்டுவதற்காகத்தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர் சமூகநீதிப் போராட்டங்களை ஓயாமல் நடத்தி வருகிறேன். அதற்கு இப்போது பயன் கிடைத்துள்ளது.

சமூகநீதிக்கான போராட்டம் என்பதும், இயக்கம் நடத்துவதும் ஓடிக்கொண்டிருக்கும் நதியைப் போன்றது ஆகும். அது ஒரு போதும் ஓய்வதில்லை. இந்த வழியில் எனது சமூகநீதிப் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

இலக்கு

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த தருணத்தில் நான் அளிக்க விரும்பும் வாக்குறுதி இதுதான். ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீட்டை பெற்றுத்தருவதுதான் எனது இலக்கு. அதுதான் தமிழ்நாட்டில் சமூகநீதியை முழுமையடையச் செய்யும்.

அனைத்து சமுதாயங்களும் எங்களின் சகோதர சமுதாயங்கள்தான். அனைவருக்கும் சமூகநீதி கிடைத்தால்தான் தமிழ்நாடு புதிய வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எட்ட முடியும். எனவே, அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க நானும், பா.ம.க.வும் ஓயாமல் பாடுபடுவோம்’’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொலைபேசியில் பேச்சு

டாக்டர் ராமதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் நன்றி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில், பா.ம.க. சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சி.சிவகுமார், எஸ்.சதாசிவம், ஆர்.அருள் ஆகியோர் சந்தித்து, அரசு பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story