விழாவுக்காக சட்டமன்ற வரலாற்றை மாற்றக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்


விழாவுக்காக சட்டமன்ற வரலாற்றை மாற்றக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
x
தினத்தந்தி 29 July 2021 2:13 AM GMT (Updated: 29 July 2021 2:13 AM GMT)

‘‘தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படம் திறப்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் விழா கொண்டாட வேண்டும் என்பதற்காக வரலாற்றை மாற்றக்கூடாது’’, என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை, 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1937-ம் ஆண்டே நடந்தது. சட்டமன்ற பொன்விழா கொண்டாடும் நேரத்தில், முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அப்போது அதை நடத்த முடியவில்லை. இந்தநிலையில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அப்போது 2 வருடம் கழித்து, அதாவது 1989-ம் ஆண்டுதான் பொன்விழாவை கொண்டாடினார்கள். 1937-ம் ஆண்டை கணக்கிட்டு தான் இந்த பொன்விழாவானது, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது.

ஆனால் இப்போது முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் சட்டமன்ற நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பாக, 1921-ம் ஆண்டை கணக்கில் எடுக்கிறார். இதில் முரண்பாடு இருக்கிறது. சட்டமன்றத்தில் கருணாநிதி படத்தை திறக்கட்டும். இது அவர்களது கட்சியும், ஆட்சியும் முடிவு செய்திருக்கும் விஷயம். இதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் விழா கொண்டாடும் நோக்கத்துக்காக வரலாற்றை மாற்றி எழுத கூடாது.

அப்படி என்றால் 1937-ம் ஆண்டை கணக்கிட்டு கருணாநிதி பொன்விழா எடுத்தது தவறா? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். சுதந்திரம் பெற்றபின்னர் 1952-ம் ஆண்டை தான் கணக்கில் எடுக்கவேண்டும். சுதந்திரம் பெற்றபின்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் அந்த ஆண்டில்தான் கூடியது. ஏனெனில் 1937-ம் ஆண்டில் சட்டமன்றம் கூடிய சமயத்தில் அனைவருக்கும் ஓட்டுரிமை என்பதே கிடையாது. சுதந்திரம் பெற்றபின்புதான் அனைவருக்கும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டு 1952-ம் ஆண்டில் முதல் சட்டமன்றம் உருவானது.

அதனால்தான் 1952-ம் ஆண்டை கணக்கிட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற வைரவிழா கொண்டாடப்பட்டது. ஜனநாயக முறைப்படி 1952-ம் ஆண்டைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தி.மு.க. தரப்பு வாதப்படி 1921-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொள்ள வாய்ப்பே கிடையாது. ஒருவேளை 1937-ம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட, நூற்றாண்டு விழா கொண்டாட இன்னும் பல வருடங்கள் உள்ளன. அதற்குள்ளாக ஏன் இந்த அவசரம்? எனவே மக்களை முட்டாளாக்கும் முயற்சியிலோ, வரலாற்றை திசைதிருப்பும் முயற்சியிலோ ஈடுபடுவது என்பது ஏற்கமுடியாத விஷயம். இவ்வாறு டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Next Story