பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
தினத்தந்தி 29 July 2021 11:53 PM GMT (Updated: 29 July 2021 11:53 PM GMT)

பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கள்ளப்பெரம்பூர் ஏரிக்கு நேரில் வந்து இந்த பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து 500 மரங்களை கொண்ட குறுங்காட்டை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டது. கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தாலும், அது எந்த அளவுக்கு இருக்கும் என தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு பள்ளி திறப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை அரசுக்கு உள்ளது. தமிழக முதல்வர் எடுக்கும் முடிவின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரப்பு செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்கிற விவரம் தெரியவரும். அதை அடிப்படையாகக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

மேலும் தனியார் பள்ளிகளைப்போல அரசு பள்ளிகளையும் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் கற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story