ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சியின் முழு விவரம்


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கும் நிகழ்ச்சியின் முழு விவரம்
x
தினத்தந்தி 30 July 2021 12:17 AM GMT (Updated: 30 July 2021 12:17 AM GMT)

தமிழக சட்டசபையில் வருகிற 2-ந்தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் முழு விவரம் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவும், சட்டசபை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவும் ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தலைமை தாங்க இருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நேற்று சபாநாயகர் அப்பாவு விழாவுக்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார்.

இதேபோல், விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்குவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை சபாநாயகர் அப்பாவு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாலை ஜனாதிபதியை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழை வழங்க இருக்கிறார்.

அதன்பின்னர், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கப்பட இருக்கிறது. யார் யாருக்கு எந்த இருக்கை எண் என்பது அழைப்பிதழிலேயே குறிக்கப்பட்டு வழங்கப்பட இருக்கிறது.

சரியாக மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் விழா தொடங்குகிறது. முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்படுகிறது. மாலை 5.05 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை ஆற்றுகிறார்.

மாலை 5.10 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சட்டசபை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். மாலை 5.20 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

மாலை 5.30 மணிக்கு விழாவுக்கு தலைமை தாங்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை உரை ஆற்றுகிறார். மாலை 5.40 மணிக்கு தலைமை விருந்தினரும், ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்த் விழாப் பேருரை ஆற்றுகிறார்.

மாலை 5.50 மணிக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி நன்றியுரை ஆற்றுகிறார். நிறைவாக தேசிய கீதம் இசைக்க விழா முடிவடைகிறது.

விழாவுக்கு வரும் சிறப்பு அழைப்பாளர்கள் கண்டிப்பாக அழைப்பிதழை கொண்டு வந்து, குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அமர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

செல்போன் மற்றும் கேமரா எடுத்து வரவும் யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வருபவர்கள் கண்டிப்பாக என்-95 வகை முககவசத்தை மட்டுமே அணிந்துவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் விழா ஒரு மணி நேரத்திற்குள் முடிவடைந்து விடுகிறது.

ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி, போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட இருக்கிறது.

Next Story