வருமானம், சாதி சான்றிதழை காலதாமதமின்றி வழங்க வேண்டும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு


வருமானம், சாதி சான்றிதழை காலதாமதமின்றி வழங்க வேண்டும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவு
x
தினத்தந்தி 30 July 2021 1:16 AM GMT (Updated: 30 July 2021 1:16 AM GMT)

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வருமானம், சாதி சான்றிதழை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

இதுதொடர்பாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் இருந்து வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எந்தவித காலதாமதமின்றி உடனடியாக பரிசீலித்து சான்றிதழ் வழங்க தாசில்தார்கள் மற்றும் உதவி கலெக்டர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து இ-சேவை மையங்களிலும் கூட்ட நெரிசல் இன்றி மாணவர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எந்தவித இடையூறும் இன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

தேவையற்ற கால தாமதத்தினை தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தவறாது சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story