கட்டாத தடுப்பணையை கட்டியதாக மோசடியா? அதிகாரிகள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கட்டாத தடுப்பணையை கட்டியதாக மோசடியா? அதிகாரிகள் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 July 2021 2:23 AM GMT (Updated: 30 July 2021 2:23 AM GMT)

கட்டாத தடுப்பணையை கட்டியதாக கணக்கு காண்பித்து மோசடி நடந்துள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

சிவகங்கை மாவட்டம் நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச்சட்டத்தின் கீழ் வீரையன் கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுமதி வழங்கப்பட்டதாகவும், 3 மாதங்களில் பணிகள் நிறைவடைந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் இதுபோன்ற எந்த பணியும் இந்த பகுதியில் நடக்கவில்லை. இதுதொடர்பாக கிராமத்தினருடன் சேர்ந்து மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே வக்கீல் கமிஷனரை நியமித்து வீரையன் கண்மாய் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டதாகக் கூறப்படும் தடுப்பணை குறித்து ஆய்வு செய்யவும், இதில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். முடிவில், இந்த வழக்கை பொறுத்தவரை பொதுமக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு இருப்பது தெரியவருகிறது. எனவே இந்த வழக்கு குறித்து, ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் வீரையன் கண்மாய் தடுப்பணை கணக்குகளை ஆய்வு செய்யவும், நேரடியாக சென்று ஆய்வு செய்து அறிக்கையை சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கவும் வேண்டும். அந்த அறிக்கையின்படி கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story