‘பெகாசஸ்’ மென்பொருள் விவகாரம்: எத்தனை நாட்கள் மோடி அரசு தப்பிக்க முடியும்? - ப.சிதம்பரம் விமர்சனம்


‘பெகாசஸ்’ மென்பொருள் விவகாரம்: எத்தனை நாட்கள் மோடி அரசு தப்பிக்க முடியும்? - ப.சிதம்பரம் விமர்சனம்
x
தினத்தந்தி 30 July 2021 9:26 PM GMT (Updated: 30 July 2021 9:26 PM GMT)

பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் எத்தனை நாட்கள் மோடி அரசு தப்பிக்க முடியும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது பல நாடுகளை உலுக்கியுள்ளது. பிரான்ஸ் நாடு விசாரணையை தொடங்கியுள்ளது. இரண்டு பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன என்று பிரான்ஸ் நாட்டின் சம்பந்தப்பட்ட துறை அறிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் முறையீட்டைத் தொடர்ந்து அந்த நாட்டைச் சமாதானப்படுத்துவதற்காக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டுக்கு விரைந்துள்ளார். உளவு மென்பொருளை உருவாக்கிய என்.எஸ்.ஓ. குழுமத்தின் அலுவலகங்களில் இஸ்ரேல் அரசு சோதனை செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. 

இவ்வளவுக்கும் பிறகு எந்த உளவு வேலையும் நடக்கவில்லை என்று மோடி அரசு சாதிக்கிறது. நாடாளுமன்றத்தில் திறந்த விவாதம் வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் நியாயமான கோரிக்கையை மோடி அரசு முரட்டுத்தனமாக நிராகரிப்பது ஏன்? மோடி அரசின் பிடிவாதமும், நிராகரிப்பும் நமது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எத்தனை நாட்களுக்கு மோடி அரசு ஒளிந்து மறைந்து தப்பிக்க முடியும்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story