தமிழகத்தில் பிரசித்திபெற்ற முருகன், அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை


தமிழகத்தில் பிரசித்திபெற்ற முருகன், அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
x
தினத்தந்தி 1 Aug 2021 1:34 AM GMT (Updated: 1 Aug 2021 1:34 AM GMT)

ஆடி மாத திருவிழாக்களையொட்டி பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற முருகன், அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகளை அடைக்க மாநகராட்சி நிர்வாகம் திடீரென்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா வருகிற 3-ந் தேதி (நாளை மறுதினம்) விமரிசையாக நடைபெறும். அந்த நாளில் காவிரியில் புனிதநீராடி பூஜை செய்வதற்காக ஏராளமானவர்கள் கூடுவார்கள். மேலும் காவிரி கரையோரம் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதுதவிர ஆடி வெள்ளிக்கிழமை அன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரளுவார்கள். ஆடி அமாவாசையான வருகிற 8-ந் தேதியும் மக்கள் அதிக அளவில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கூடுவார்கள்.

கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் இந்த நாட்களில் மக்கள் கூடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று பரவல் தற்போது சற்று அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக வருகிற 9-ந் தேதி வரை தளர்வுகளின்றி ஊரடங்கை நீட்டித்து உள்ளார்.

அதிக அளவில் கூட்டம் கூடும் இடங்களில் மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், போலீசார் அந்த பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

நாளை (திங்கட்கிழமை) ஆடி கிருத்திகை விழாவிலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழாவிலும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள். இந்த நாட்களில் முருகன், அம்மன் கோவில்களில் விழா எடுக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழக கோவில்களில் அனுமதி இல்லை.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 4-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டு உளள்ளார்.

நாளை முதல் 4-ந் தேதி வரை மலைக்கோவில் 3-ம் பிரகாரத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ நிகழ்வுகளை இணையதளத்திலும், யூடியூப் சேனலிலும் நேரடியாக மாலை 5 மணி அளவில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்.

இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள குமரக்கோட்டம், வல்லக்கோட்டை, குன்றத்தூர் மற்றும் இளையனார் வேலூர் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில் இன்றும், நாளையும் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் நாளை முதல் 8-ந் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திற்கும் கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த திருவிழா மற்றும் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன், வயலூர் முருகன், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், மலைக்கோட்டை கோவில், உறையூர் வெக்காளியம்மன் ஆகிய கோவில்களில் நாளை (2-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (3-ந் தேதி) பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை மறுநாள் ஆடிப்பெருக்கையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நாளையும், நாளை மறுநாளும் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செவ்வாய்க்கிழமை வரையில் 3 நாட்கள் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 3-ந் தேதி மற்றும் 4, 6, 8 மற்றும் 13-ந் தேதி என மொத்தம் 5 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3-ந் தேதி (ஆடிப்பெருக்கு), 8-ந் தேதி (ஆடி அமாவாசை) ஆகிய நாட்களில் மேட்டூர் அணை நீர்த்தேக்கங்களில் பக்தர்கள் தண்ணீரில் குளிக்கவும், பூங்காவிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை, ஆடி 18-ம் நாட்களை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3-ந் தேதி வரையும், ஆடி அமாவாசையான வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விஷேச நாட்களில் அதிக பக்தர்கள் கூடுவார்கள். , மேற்கண்ட 4 நாட்களில் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இந்த நாட்களில் கோவிலில் ஆகமவிதிகளின் படி அனைத்து நிகழ்ச்சிகளும், கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் ஆகியவற்றில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் படித்துறைகளில் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது உள்ளிட்ட பிற சடங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

Next Story