சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க கூடாது - சென்னை மாநகராட்சி


சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க கூடாது - சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 1 Aug 2021 2:47 PM GMT (Updated: 1 Aug 2021 2:47 PM GMT)

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித்துறைக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் கூவம் நதிக்கரையோரம் இருந்த 93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்கள் எழுப்பப்பட்ட நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க கூடாது என தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நீர்நிலைகளின்‌ கரையோரங்களில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்‌ ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்‌சி, அண்ணாநகர்‌ மண்டலம்‌, அரும்பாக்கம்‌ ராதாகிருஷ்ணன்‌ நகர்‌ பகுதியில்‌ கூவம்‌ நதிக்கரையோரம்‌ 243 குடியிருப்புகள்‌ ஆக்கிரமிப்புகள்‌ என கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற மாநகராட்சியின்‌ சார்பில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டன. இவர்களில்‌ 93 ஆக்கிரமிப்பு குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரிய குடியிருப்பில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அந்த வகையில் சென்னை அரும்பாக்கம்‌ ராதாகிருஷ்ணன்‌ நகர்‌ பகுதியில்‌ கூவம்‌ நதிக்கரையோரம்‌ இருந்த 93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள்‌ அகற்றப்பட்டு, தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில்‌ பாதுகாப்பாக மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்‌. 

மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும்‌ தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக மறுகுடியமர்த்தப்படுவார்கள்‌. மேலும்‌ ராதாகிருஷ்ணன்‌ நகர்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்புகள்‌ அகற்றப்படும்போது பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்கள்‌ பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு சூடிசைப்‌ பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

எனவே, ஆக்கிரமிப்பு பகுதியில்‌ கூடியிருக்கும்‌ எஞ்சிய மக்கள்‌ அனைவருக்கும்‌ தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும்‌ வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சியின்‌ சார்பில்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story