மருத்துவ படிப்புக்கு மத்திய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என்று அறிவிப்பதா? - வைகோ கண்டனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Aug 2021 7:47 PM GMT (Updated: 1 Aug 2021 7:47 PM GMT)

மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மேற்படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப்படிப்பு, சிறப்பு படிப்புகளுக்கும் மத்திய அரசே பொது கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புக்கான 100 சதவீத இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழக அரசே நடத்தவேண்டும். இதில் மத்திய சுகாதாரத்துறை கலந்தாய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க. அரசு, கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story