ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை
x
தினத்தந்தி 2 Aug 2021 1:53 AM GMT (Updated: 2 Aug 2021 2:03 AM GMT)

சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (திங்கட்கிழமை) சென்னை வருகிறார். இதனையடுத்து 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் முதன்முதலில், 1921-ம் ஆண்டு மேலவை என்று சொல்லப்படும் சட்டமன்ற கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டை கொண்டாடும் வகையில், தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவும், சட்டசபை அரங்கத்தில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவும் என இருபெரும் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இருவரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு ஆகியோர் வரவேற்று அழைத்து வருகிறார்கள்.

சரியாக மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்படுகிறது. மாலை 5.05 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்று பேசுகிறார். மாலை 5.15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சட்டசபை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி யின் முழு உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

மாலை 5.20 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு விழாவுக்கு தலைமை தாங்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை உரை நிகழ்த்துகிறார். மாலை 5.40 மணிக்கு தலைமை விருந்தினரும், ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்த் விழா பேருரை ஆற்றுகிறார். மாலை 5.50 மணிக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நன்றியுரை ஆற்றுகிறார். நிறைவாக தேசிய கீதம் இசைக்க விழா முடிவடைகிறது.

இந்த விழாவில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு, இருக்கை எண்ணுடன் கூடிய அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அமர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

செல்போன் மற்றும் கேமரா எடுத்து வரவும் யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வருபவர்கள் கண்டிப்பாக ‘என்-95’ வகை முக கவசத்தை மட்டுமே அணிந்துவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனன்தாக விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் ஜனாதிபதி சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். விமான நிலையம் வந்தவுடன் ஜனாதிபதி கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு வருகிறார்.

அவர் செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஜனாதிபதி பாதுகாப்புக்காக கமாண்டோ படை வீரர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். விமான நிலையம், கவர்னர் மாளிகையில் உயர் அதிகாரிகள் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். விழா நடக்கும் தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் கண்காணிப்பு கேமராக்களும் புதிதாக பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர ‘டிரோன்’ கேமராக்கள் மூலமாகவும் பாதுகாப்பு பணிகளை போலீசார் ஆய்வு செய்கிறார்கள்.

ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அவர் வரும்போது சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்படும்,

வாகனங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Next Story