டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த ரூ.5 லட்சம் கூலிப்பணம்


டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த ரூ.5 லட்சம் கூலிப்பணம்
x
தினத்தந்தி 5 Aug 2021 4:39 AM GMT (Updated: 5 Aug 2021 4:39 AM GMT)

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த ரூ.5 லட்சம் கூலிப்பணம் தனிப்படை போலீஸ் அதிகாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்.

சென்னை, 

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளை, ரூ.5 லட்சம் கூலிப்பணம் விவகாரம்தான் காட்டிக்கொடுத்தது, என்று அந்த வழக்கு தொடர்பான தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த வழக்கில் துப்பு துலக்கியது பற்றி அந்த போலீஸ் அதிகாரி திகில் நிறைந்த கதை போல விவரித்தார். அவர் கூறியதாவது:-

டாக்டர் சுப்பையா கொலைக்கான காரணம் சாதாரண நிலத்தகராறு தான் என்றாலும், அந்த கொலை நடந்த விதம் மிகவும் கொடூரமான சம்பவம் ஆகும். அதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் படித்து நல்ல வேலையில், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தவர்கள். பொன்னுசாமியும், அவரது மனைவி மேரி புஷ்பமும் ஆசிரியர்கள். வில்லியம், பாசில் ஆகியோர் வக்கீல்கள். போரிஸ் என்ஜினீயர். ஜேம்ஸ் சதீஷ்குமார் அரசு டாக்டர். கூலிப்படையைச்சேர்ந்த செல்வப்பிரகாஷ், அய்யப்பன் ஆகியோர் டிப்ளமோ என்ஜினீயர்கள்.

பாசிலும், போரிசும் பொன்னுசாமியின் மகன்கள். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள 2.5 ஏக்கர் நிலம்தான்

இந்த கொலைக்கான மூல காரணம். இந்த நிலத்துக்கு டாக்டர் சுப்பையாவும், ஆசிரியர் பொன்னுசாமியும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பிரச்சினைக்குரிய 2.5 ஏக்கர் நிலம், டாக்டர் சுப்பையாவின் தாய் வழி தாத்தாவின் சொத்து ஆகும். அந்த சொத்துக்கு பொன்னுசாமியும் சொந்தம் கொண்டாடினார்.

ஆனால் சுப்ரீம்கோர்ட்டு வரை இந்த சொத்து வழக்கு போகிறது. சுப்ரீம்கோர்ட்டு டாக்டர் சுப்பையாவுக்குதான் இந்த சொத்து சொந்தம் என்று தீர்ப்பு வழங்கி விடுகிறது. பொன்னுசாமி குடும்பத்தினர் குறிப்பிட்ட சொத்து தொடர்பாக போலி பத்திரம் தயாரித்து உரிமை கொண்டாடியதாக ஒரு புகாரும் போலீஸ் வழக்கு விசாரணையில் உள்ளது.

பிரச்சினைக்குரிய சொத்து மதிப்புமிக்கது. அந்த சொத்தை எப்படியாவது அடைய வேண்டும், என்று பொன்னுசாமி குடும்பத்தினர் சபதம் போட்டு செயல்பட்டனர். வக்கீல் வில்லியம்சிடம், பாசில் ஜூனியர் வக்கீலாக இருந்தார். அப்போது குறிப்பிட்ட சொத்தை அடைய வில்லியம்சின் உதவியை பாசில் நாடினார். சொத்தை சொந்தமாக்குவதில் வில்லியமும் தீவிரமாக செயல்பட்டார்.

பிரச்சினை பெரிதாக வேண்டாம் என்று சொத்தில் ஒரு பகுதியை பொன்னுசாமிக்கு, டாக்டர் சுப்பையா பிரித்து கொடுக்கிறார். ஆனால் அதில் திருப்தி அடையாத பொன்னுசாமி குடும்பத்தினர் சொத்து முழுவதையும் அடைய ஆசைப்படுகின்றனர். அதன் விளைவுதான் டாக்டர் சுப்பையா கொலைக்கு மூலகாரணமாகிறது.

இந்த நேரத்தில்தான் இந்த வழக்கின் மூளையாக செயல்பட்ட அரசு டாக்டர் ஜேம்ஸ், வக்கீல் வில்லியமுக்கு அறிமுகமாகிறார். டாக்டர் ஜேம்சுக்கு சொத்து பிரச்சினை ஒன்றில் வக்கீல் வில்லியமும், பாசிலும் உதவி செய்கிறார்கள். அந்த நேரத்தில் டாக்டர் சுப்பையாவுடனான சொத்து பிரச்சினையை ஜேம்சிடம், வில்லியம் சொல்கிறார். அப்போது டாக்டர் ஜேம்ஸ்தான் டாக்டர் சுப்பையாவை தீர்த்துக்கட்டி விட்டால் பிரச்சினை சுமுகமாக தீர்ந்து விடும். எனவே அவரை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டி விடலாம் என்று ஆலோசனை சொல்கிறார்.

இதற்கு வக்கீல்கள் வில்லியம், பாசில், என்ஜினீயர் போரிஸ் மற்றும் பொன்னுசாமி, மேரிபுஷ்பம் ஆகியோர் சம்மதம் தெரிவிக்கின்றனர். குற்றவாளி முருகன் டாக்டரிடம் கார் டிரைவராக வேலை செய்கிறார். கூலிப்படையை தயார் செய்யும் பொறுப்பை முருகனிடம் டாக்டர் ஜேம்ஸ் ஒப்படைக்கிறார்.

முருகன் தனது நண்பர்களான செல்வபிரகாஷ், அய்யப்பன், ஏசுராஜன் ஆகியோரை கூலிப்படையாக தயார் செய்கிறார். செல்வபிரகாசும், அய்யப்பனும் ஐ.டி.ஐ.யில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றி திரிபவர்கள். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை கூலிப்படையில் சேர்க்கிறார்கள்.

டாக்டர் சுப்பையாவை சென்னைக்கு போய் தீர்த்துக்கட்டி விட்டு வந்தால், ரூ.5 லட்சம் கூலியாக வாங்கி தருகிறேன், என்று டாக்டர் ஜேம்ஸ் ஆசை காட்டுகிறார். மேலும் அவர்களுக்கு கொலைக்கான உடனடி பரிசாக மோட்டார்சைக்கிள் ஒன்றையும், டாக்டர் ஜேம்ஸ் வாங்கி கொடுக்கிறார்.

அந்த மோட்டார் சைக்கிளில்தான் குற்றவாளிகள் முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகியோர் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு பயணமாகி வந்தனர். முதல் கட்ட முயற்சியில் கொலை திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அடுத்து 6 மாதங்கள் கழித்து மீண்டும் வந்துதான் டாக்டர் சுப்பையாவை தீர்த்து கட்டுகிறார்கள்.

சுப்பையாவை அரிவாளால் வெட்டி விட்டு முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் மூவரும் தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது, மோட்டார் சைக்கிள் திடீரென்று ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளை கொஞ்ச தூரம் தள்ளிச்சென்று சாலை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பிச்செல்கிறார்கள். அந்த மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் எடுத்துச்சென்று தனது சொந்த உபயோகத்திற்கு ஓட்டி உள்ளார். அந்த போக்குவரத்து போலீஸ்காரர் அந்த மோட்டார் சைக்கிளின் நம்பரை வைத்து விசாரித்து இருந்தால், குற்றவாளிகளை எளிதில் பிடித்து இருக்கலாம்.

அந்த போக்குவரத்து போலீஸ்காரர் செய்த தவறால் குற்றவாளிகளை கைது செய்வதில் கடும் சவாலை சந்திக்க நேர்ந்தது. டாக்டர் சுப்பையாவை கொலையாளிகள் அரிவாளால் வெட்டும் காட்சி அந்த பகுதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. கேமரா காட்சியில் கொலையாளிகளின் முகம் தெளிவாக தெரியவில்லை. அதை வைத்து குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.

நிலத்தகராறுதான் கொலைக்கு காரணம் என்று தெரிந்தாலும், கொலையாளிகள் யார், என்று கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் இருந்தது. பொன்னுசாமி குடும்பத்தினரை பிடித்து முதலில் விசாரித்த போது, சரியாக துப்பு கிடைக்கவில்லை.

கொலை செய்வதற்காக பேசப்பட்ட ரூ.5 லட்சம் கூலியை, டாக்டர் ஜேம்ஸ் முறையாக கொடுக்கவில்லை. இதனால் முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகியோர் டாக்டர் ஜேம்சுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். கூலியை கொடுக்காவிட்டால், டாக்டர் சுப்பையாவுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் நேரும் என்று, ஜேம்சை தொடர்ந்து மிரட்டி வந்தனர்.

இதனால் பயந்து போன ஜேம்ஸ் இந்த இக்கட்டில் இருந்து விடுபட, தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அந்த வக்கீல்தான் டாக்டர் ஜேம்சை பிடிக்க உதவினார். டாக்டர் ஜேம்ஸ் சென்னை அண்ணாநகரில் வைத்து போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணியால் முதலில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு குற்றவாளிகள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். கடைசியாக வக்கீல் வில்லியம் கைதானார்.

3 மாத கடும் போராட்டத்துக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகள் கைதானார்கள். அப்போதைய போலீஸ் கமிஷனர்கள் ஜார்ஜ், திரிபாதி, இணை கமிஷனராக இருந்த சங்கர், துணை கமிஷனர்கள் லட்சுமி, பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்கள் நந்தகுமார், முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கனகராஜ், ராஜேஷ்கண்ணா, ஜவஹர், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, லாமேக் மற்றும் போலீஸ் படையைச்சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் இரவும், பகலும் கடுமையாக போராடினார்கள்.

நாங்குநேரி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீடுதான் போலீஸ் விசாரணையின் தளமாக பயன்பட்டது. மும்பைக்கு தப்பிச்சென்ற கூலிப்படையை சேர்ந்தவர்களை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீஸ் படையினர்தான் பெரும்பாடு பட்டு கைது செய்தனர்.

இப்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி உள்ளனர்.

இது மகிழ்ச்சியாக இருந்தாலும், இதில் இரவும், பகலும் பாடுபட்ட போலீஸ் படையினருக்கு ஒரு நற்சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை. டி.ஜி.பி.சைலேந்திரபாபு அதற்கு ஏற்பாடு செய்தால் இதில் எங்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story