கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்


கொரோனா பரவல் எதிரொலி: திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
x
தினத்தந்தி 5 Aug 2021 6:49 AM GMT (Updated: 5 Aug 2021 6:49 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 3-வது அலை கொரோனா பரவலை தடுக்க காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

திருப்பூர், 

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 9-ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்துக்கடை தவிர அனைத்து மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்க்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாநகரத்தில் வணிக பகுதிகளில் இயங்கும் பால், மருந்துக்கடை, மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள், உணவு பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனையை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும். அங்கு பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் சேராதவாறு ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.

கேரள-தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடி வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா இல்லை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் சோதனை சாவடியிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story