சட்டமன்ற மேல்சபை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும்: கமல்ஹாசன்


சட்டமன்ற மேல்சபை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும்: கமல்ஹாசன்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:30 PM GMT (Updated: 6 Aug 2021 5:37 PM GMT)

சட்டமன்ற மேல்சபை அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிடவேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

சட்ட மேலவை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வரும் சமயத்திலெல்லாம் மேலவையை கொண்டுவரும் முயற்சியில் தீர்மானங்களை நிறைவேற்றுவதும் அடுத்துவரும் அ.தி.மு.க. அந்த முயற்சியை முறியடிப்பதும் தொடர் நிகழ்வு. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை சட்டமன்ற தொடரில் மீண்டும் மேலவை கொண்டுவருவதற்கான தீர்மானத்தை தி.மு.க. அரசு கொண்டு வரவிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சட்டமன்றம் இருக்கிறது. தமிழக அரசுக்கு வழிகாட்ட பல்வேறு ஆலோசனைக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ‘சட்ட மேலவை’ என்பது தேவையில்லாத ஒன்று. ஒரு பக்கம் முந்தைய அ.தி.மு.க. அரசு கஜானாவை காலி செய்து வைத்திருப்பதால் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் காலாவதியாகிப்போன சட்ட மேலவையை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சி செய்வது ஏற்புடையதல்ல.

கைவிடவேண்டும்
கொரோனா பெருந்தொற்றினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு மாநிலம் தத்தளிக்கும் சூழலில் இந்த கவுரவ பதவிகள் தேவையற்றவை. காலத்துக்கு ஒவ்வாத இந்த மேலவை எனும் அமைப்பை இந்தியாவின் பல மாநிலங்கள் ரத்து செய்துவிட்டன. மக்கள் வாழ்வில் எந்த ஏற்றத்தையும், மாற்றத்தையும் உருவாக்காத, அதே சமயத்தில் செலவீனம் பிடித்த இந்த அவையால் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் எந்த பயனுமில்லை. சட்டமன்றத்தில் இருக்கும் பலத்தை வைத்து தி.மு.க. ‘சட்ட மேலவை’ என்னும் ஏற்பாட்டை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

ஆனால், மாநிலம் இன்றிருக்கும் சூழலில் இது தேவையற்றது என்பதை ஆள்வோருக்கும், மக்களுக்கும் சொல்லவேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. ‘சட்ட மேலவை’ மீண்டும் கொண்டு வரும் திட்டம் தமிழக அரசுக்கு இருக்குமானால், இன்றைய அரசியல், பொருளாதார சூழல்களை மனதிற்கொண்டு இந்த முயற்சியை கைவிடும்படி தமிழக முதல்-அமைச்சரை மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story