ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கவர்னர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கவர்னர், மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 7 Aug 2021 6:03 PM GMT (Updated: 7 Aug 2021 6:03 PM GMT)

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியாவுக்கு வாழ்த்து தெரிவித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்த பிரிவில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா ஆகியோருக்கு என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களால் மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒலிம்பிக்கின் தடகள பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்துள்ளார். அவருடைய குறிப்பிடத்தகுந்த சாதனை மிகவும் பாராட்டத்தக்கது.

அவர், இந்தியாவை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். இந்த சாதனைகள், ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வாங்கி குவிப்பதற்கு ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன். சாதனை படைத்த வீரர்களுக்கும், அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதோடு, அவர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை செய்யவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மகத்தான நாள். தடகள போட்டிகளில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இந்தியாவின் 120 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்த நீரஜ் சோப்ராவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

100 கோடி இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையுணர்வை நீங்கள் விதைத்துள்ளீர்கள். உண்மையிலேயே நீங்கள் நாட்டின் நாயகன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவுற்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீரர் நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ள ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள். இந்த சாதனை ஈடு இணையற்றது. இதுவரை தங்கம் கிடைக்கவில்லை என்ற குறையை நீரஜ் சோப்ரா தீர்த்து உள்ளார். அவரது சாதனை பயணம் தொடரட்டும். இந்தியாவின் தங்க வேட்டை நீடிக்கட்டும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், ‘ஈட்டி எறிதல் போட்டியை தொடக்கத்தில் இருந்து நிறைவடையும் வரையிலும் பார்த்தேன். அந்த போட்டி முழுவதிலும் நீரஜ் சோப்ரா ஆதிக்கம் செலுத்தினார். பாதி தூரத்தையும் தாண்டி அவர் முன்னணியில் இருந்தார். இறுதியில் மற்றவர்களை 2 மீட்டர் பின்னுக்கு தள்ளி நீரஜ் சோப்ரா வெற்றி வாகை சூடினார். 23 வயது நிரம்பிய இளைஞருக்கு இது ஒளிமயமான வெற்றி. 2024, 2028 மற்றும் 2032 என குறைந்தது 3 ஒலிம்பிக் போட்டிகளில் நீரஜ் சோப்ரா பங்கேற்பார்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் ஏ.நாராயணன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்துரமேஷ் நாடார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் ஆ.மணி அரசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Next Story