தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு


தமிழகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு
x
தினத்தந்தி 8 Aug 2021 5:19 AM GMT (Updated: 8 Aug 2021 5:19 AM GMT)

தமிழகத்தில் வருகிற2030-ம் ஆண்டுக்குள் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி பி.ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் எரிபொருளுக்கு மாற்றாகவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதுகாப்பு நிறைந்த எரிபொருளான இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் முதல் இயற்கை எரிவாயு முனையம் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவன கூட்டுத் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்த முனையத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான செயல் இயக்குனர் பி.ஜெயதேவன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

உலக அளவில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது. இந்நிலையில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை அமெரிக்கா, கத்தார், மலேசியா, அரபு நாடுகள், நைஜீரியா, ஓமன் ஆகியவை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 25 சரக்கு கப்பல்கள் மூலம் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த முனையத்தின் பயன்பாடு 50 சதவீதமாக உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் இது முழுமையான பயன்பாட்டை எட்டும். அப்போது, 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படும். அதற்கு அதிகமாக தேவை அதிகரிக்கும்போது, அடுத்த 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு கையாளுவதற்கான திட்டமும் தயார்நிலையில் இருக்கிறது.

தமிழகத்தில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி, ராமநாதபுரம் வரை சுமார் ஆயிரத்து 500 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் 17 மாவட்டங்கள் பயன் அடையும். இந்த மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்ய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இந்த பணிகள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து, இந்த கட்டமைப்பை பயன்படுத்தி, 2030-ம் ஆண்டுக்குள் 17 மாவட்டங்களில் சுமார் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக 22 மாவட்டங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

சென்னையில் தற்போது 25 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள. அடுத்த 8 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 131 இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. இயற்கை எரிவாயு பயன்பாடானது பெட்ரோல், டீசல் விலையை ஒப்பிடும்போது 50 சதவீதம் லாபகரமானது. சமையல் எரிவாயுவை ஒப்பிடும்போது 15 சதவீதம் லாபகரமானது. மேலும் மற்ற எரிபொருட்களைவிட இது மிகவும் பாதுகாப்பானது. இயற்கை எரிவாயுவின் பயன்பாடு அதிகரிக்கும்போது தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சியும் கூடும்.

தமிழகத்தில் எந்த திட்டம் தொடங்குவதற்கும் தமிழக அரசு மிகுந்த ஒத்துழைப்பு வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு முனையத்தின் தலைமை செயல் அதிகாரி கே.ராமு, தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜெ.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story