"உள்ளாட்சி தேர்தல்; 100% வெற்றி பெற வேண்டும்" - மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை


உள்ளாட்சி தேர்தல்; 100% வெற்றி பெற வேண்டும் - மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
x
தினத்தந்தி 8 Aug 2021 8:20 AM GMT (Updated: 8 Aug 2021 8:20 AM GMT)

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றிக்கு தீவிரமாக உழைக்க வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை,

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர்களுடன் 9 மாவட்டங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். 

மு.க.ஸ்டாலினுடன் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக உள்ளாட்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 9 மாவட்டத்தில் உள்ள வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள்தான் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்புவது வழக்கம்.

அந்த வகையில் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்போது கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களை மக்கள் மத்தியில் விளக்கி ஓட்டு கேட்க வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர் வெற்றி பெறும் வகையில் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் மக்களிடையே நமக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100% வெற்றிபெற வேண்டும். என்று மாவட்டசெயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story