பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.500 கூடுதல் உதவித்தொகை


பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.500 கூடுதல் உதவித்தொகை
x
தினத்தந்தி 9 Aug 2021 6:39 PM GMT (Updated: 9 Aug 2021 6:39 PM GMT)

பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.500 கூடுதல் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 புதுச்சேரி
பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.500 கூடுதல் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கூடுதல் உதவித்தொகை

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற போது மாதந்தோறும் அரசு உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக மாதந்தோறும் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். புதிதாக 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
ரங்கசாமியின் அறிவிப்பை ஏற்று ரூ.500 கூடுதல் உதவித்தொகையானது ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 847 பயனாளிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்த தொகையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வங்கியை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

புதிய பயனாளிகள்

ஆகவே 18 வயது முதல் 54 வயது வரை உள்ள விதவைகள், முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் மற்றும் 55 வயது முதல் 59 வயது வரை உள்ள முதியோர்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், 60 வயது முதல் 79 வயது வரையுள்ள முதியோர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், 80 வயதுக்கு மேல் உள்ள முதியோர்களுக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும் பெற்றுக் கொள்ளலாம்.
10 ஆயிரம் புதிய கூடுதல் பயனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகையானது வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story