அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு ஏற்பட்டதா? வளர்ச்சி திட்டங்களுக்குதான் கடன் வாங்கினோம் எடப்பாடி பழனிசாமி பேட்டி


அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு ஏற்பட்டதா? வளர்ச்சி திட்டங்களுக்குதான் கடன் வாங்கினோம் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2021 1:14 AM GMT (Updated: 10 Aug 2021 1:14 AM GMT)

‘அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு ஏற்பட்டது என்பது தவறான கருத்து’ என்றும், வளர்ச்சி திட்டங்களுக்கு தான் கடன் வாங்கினோம் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி பகுதி தூய்மை பணியாளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதிநிலை சீர்கேடு

தி.மு.க. வெளியிடும் நிதி நிலை வெள்ளை அறிக்கை ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த பட்ஜெட்டில் வரவு-செலவு, கடன் எவ்வளவு இருக்கிறது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. இவற்றை சுட்டி காட்டி தான் அவர்கள் அறிக்கையை வெளியிடுகிறார்கள் என நான் நம்புகிறேன்.

கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு ஏற்பட்டது என்பது தவறான கருத்து. 2011-ம் ஆண்டு தி.மு.க. தோல்வியுற்ற போது ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனில் தான், அன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பொறுப்பேற்றார். மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு தான் கடன் வாங்கப்பட்டது, இதில் பாதிக்கு மேல் மூலதனமாக தற்போது இருக்கின்றது.

வருவாய் இழப்பு

ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் கடன் பெற்று தான் வளர்ச்சி திட்டங்களை செய்து வருகின்றன.

மின்வாரியம், போக்குவரத்து, உள்ளாட்சி போன்ற துறைகளில் வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மின்சார உற்பத்தி செய்வதற்கான மின்சாதன கட்டணம், அனல் மின் நிலையத்தில் எரிபொருள் கட்டணம் மற்றும் எரிபொருள் கொண்டுவர போக்குவரத்து கட்டணம் ஆகியவை உயர்வாலும், மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதாலும் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் போக்குவரத்து துறையிலும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் எந்த ஒரு அரசாங்கமும் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்திக்கின்ற பொழுது வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

விலையை குறைக்கவில்லை

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு தான் இன்று தி.மு.க. அரசு அடிக்கல் நாட்டி வருகிறது. இந்த ஆட்சியில் 100 நாட்களில் எந்த திட்டமும் செயல்படுத்தியதாக தெரியவில்லை.

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில், விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு எல்லா மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் 9 லட்சத்திற்கும் மேலான மனுக்கள் பெறப்பட்டு அதில் 5 லட்சத்திற்கும் மேலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இதே நடைமுறைதான் தி.மு.க. அரசும் கடைப்பிடித்து வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடன் 100 நாட்களில் மக்களுடைய குறைகள் தீர்க்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்தனர். மேலும் ஆட்சி பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம், டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்றும் கூறினார்கள். ஆனால் இதுவரை குறைக்கப்படவில்லை.

கண்டன ஆர்ப்பாட்டம்

மேலும் தி.மு.க. 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிட்டன. அதில் ஒரு சிலவற்றை தவிர மற்ற அனைத்தும் நிறைவேற்றப்படாததால் தான் அ.தி.மு.க. சார்பில் அறவழியில் 14 ஆயிரம் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுவரை தமிழக வரலாற்றிலேயே ஒரே நாளில் 14 ஆயிரம் இடங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவோடு கண்டன ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. நடத்தியது.

தற்போது 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னும் மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அறிவிப்பு வந்த பின்பு கூட்டணி கட்சியுடன் சேர்ந்து செயல்படுவோம்.

ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பா.ஜனதாவில் இணைவதாக கூறுவது தவறான தகவல். அவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் உள்ளார். அவர் அ.தி.மு.க. மீது பற்று கொண்டவர். மேலும் அவர் தனது பணி நிமித்தமாக டெல்லி சென்றுள்ளதாக கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story