திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை


திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 10 Aug 2021 7:17 PM GMT (Updated: 10 Aug 2021 7:17 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 மணி நேரம் கனமழை பெய்தது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஏலகிரி மலை பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. காலை 6 மணி வரை 4 மணி நேரம் மழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தெருக்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதிகபட்சமாக ஆம்பூரில் 101.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழைகாரணமாக ஏரிகள் நிரம்பி வருகிறது. வாணியம்பாடி பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அம்பலூர் பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஏரியில் உடைப்பு

திரியாலம் ஏரி நிரம்பி கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பொதுப்பணித்துறையினர் மூலம் மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக்கரை உடைப்பு சரி செய்யப்பட்டது. வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத், பள்ளிப்பட்டு பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி பள்ளிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலையத்தில் தேங்கிய மழைநீர்

கனமழை காரணமாக ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் 3 மற்றும் 4-வது பிளாட்பாரத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லவேண்டிய ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 5.45 மணியளவில் புறப்பட்டு சென்றது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Next Story