சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் டெல்லியை போன்று சென்னையிலும் மெட்ரோ ரெயில் அருங்காட்சியகம்


சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் டெல்லியை போன்று சென்னையிலும் மெட்ரோ ரெயில் அருங்காட்சியகம்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:56 PM GMT (Updated: 10 Aug 2021 10:56 PM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் நடந்து வரும் சென்டிரல் சதுக்கம் அமைக்கும் பணி நிறைவடைந்தவுடன் ராஜா சர் ராமசாமி முதலியார் சத்திரத்தில் வருகிற டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

சென்னை,

டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் (டி.எம்.ஆர்.சி.) மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பட்டேல் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து உள்ளது.

இதில் சுரங்க ரெயில் பாதை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் நவீன கருவியான டணல் போரிங் எந்திரத்தின் மாதிரி, சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளின் மாதிரி, மெட்ரோ ரெயில் பூங்கா வரைபடங்கள், மெட்ரோ ரெயிலின் மாதிரி வடிவம், பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இலவசமாக இவற்றை பார்வையிடலாம்.

அதேபோல், சாஸ்திரி பூங்கா மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் தொடர்பான சிற்பம் மற்றும் கலாசாரம் தொடர்பான பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை ஆயிரக்கணக்கானோர் தினசரி பார்வையிட்டு செல்கின்றனர்.

சென்டிரல் சதுக்கத்தில் அருங்காட்சியகம்

டெல்லியில் இருப்பது போன்று சென்னையிலும் பொறியியல் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயணிகள் பயனடையும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக இருப்பதுடன், அருகில் மெட்ரோ ரெயில் நிலையம் இருக்கும் இடங்கள் தேடப்பட்டு வந்தது.

இறுதியாக சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம், வர்த்தக நிறுவனங்கள் அடங்கிய சென்டிரல் சதுக்கம் அமைக்கும் இடம் அருகில் அருங்காட்சியகம் அமைக்க இடத்தை தேர்வு செய்து உள்ளனர்.

ராமசாமி சத்திரம்

சென்டிரல் சதுக்கம் அருகில் அமைக்கப்பட்டு வரும் 2 அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நிறைவடைந்த உடன், சென்டிரல் சதுக்கம் அருகில் அதாவது ரிப்பன் கட்டிடம் எதிரில் சிவப்பு வர்ணம் பூசப்பட்ட ராஜா சர் ராமசாமி முதலியார் சத்திரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை வருகிற டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

டெல்லியில் இருப்பது போன்று சுரங்கம் மற்றும் மேல்பாதை அமைப்பதற்கான உதிரிபாகங்களின் மாதிரிகள், மெட்ரோ ரெயிலின் மாதிரி வடிவம், மெட்ரோ ரெயில் பாதைக்கான வழித்தடங்கள், பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், பொறியியல் மாணவர்கள் பயனடையும் வகையில் அவர்களுக்கு தேவையான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய பதாகைகள் அருங்காட்சியகத்தில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்டால் சென்டிரல் சதுக்கத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு அரிய தகவல்களை தெரிந்து கொள்ள அருங்காட்சியகம் உதவிகரமாக இருக்கும். அத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அருங்காட்சியகம் சென்னையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேற்கண்ட தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story