தமிழகம் முழுவதும் திடீர் நடவடிக்கை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


தமிழகம் முழுவதும் திடீர் நடவடிக்கை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 11 Aug 2021 1:27 AM GMT (Updated: 11 Aug 2021 1:27 AM GMT)

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை,

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் முறைகேடு செய்ததாக கவர்னரிடம் தி.மு.க. சார்பில் புகார் செய்யப்பட்டது.

மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு கங்காதர் நேற்று முன்தினம் கூட்டு சதி, மோசடி மற்றும் லஞ்ச ஊழல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் 19 பக்கங்கள் உள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய விவரம் வருமாறு-:-

ரூ.811 கோடி முறைகேடு

வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு அரசு ஒப்பந்த பணிகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, அறப்போர் இயக்கத்தின் கன்வீனர் ஜெயராம் ஆகியோர் புகார் மனுக்களை கொடுத்தனர். இது பற்றி விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் இந்த புகார் மனுக்கள் பற்றி பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் வேலுமணி, அவரது மூத்த சகோதரர் அன்பரசன் மற்றும் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரபிரகாஷ், சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட்ராஜா, கு.ராஜன் ஆகியோர் மீதும், கே.சி.பி. என்ஜினீயர்ஸ், ஏஸ்டெக் மெஷினரி, கன்ஸ்ட்ரானிக்ஸ் இன்பெரா, மகாகணபதி ஜூவல்லர்ஸ் நகைக்கடை, கன்ஸ்ட்ராமால் குட், ஆலயம் பவுண்டரீஸ், வைதுர்யா ஓட்டல்ஸ், ரத்னா லட்சுமி ஓட்டல்ஸ், ஆலம் ஹோல்டு அண்டு டைமண்ட்ஸ், ஆர்.எஸ்.பி.இன்ப்ரா ஆகிய நிறுவனங்கள் மீதும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதிரடி சோதனை

இந்த வழக்கை அடிப்படையாக வைத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் 60 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ளவேலுமணியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகர் சத்யதேவ் அவென்யூவில் உள்ள ஷிபிராஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வேலுமணியின் வீட்டில் 5 லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடந்தபோது வேலுமணி அங்கு இல்லை. இரவு அங்கு தங்கி இருந்த வேலுமணி அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டு, சென்னை சேப்பாக்கம் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவரது அறைக்கு (டி பிளாக்கில் 10 எண் அறை) வந்து விட்டார்.

வேலுமணியிடம் விசாரணை

இந்த தகவல் தெரிந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சிலர் எம்.எல்.ஏ. விடுதிக்கும் சென்று அங்கு வேலுமணியின் அறையில் சோதனை போட்டார்கள். அங்கிருந்த வேலுமணியிடம் விசாரணை நடத்தினார்கள்.

சென்னை மாநகராட்சி தலைமை என்ஜினீயரின் அடையாறு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கோடம்பாக்கம் ரெங்கராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள கே.சி.பி. என்ஜினீயரிங் நிறுவனத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுமணியின் ஆடிட்டர் வீடும் சோதனைக்கு தப்பவில்லை. அதே ஆழ்வார்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான நமது அம்மா பத்திரிக்கை அலுவலகத்திலும், தாம்பரம் அருகே திருநீர்மலையில் உள்ள தார் உற்பத்தி நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

இதுபோல் சென்னையில் மொத்தம் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சீபுரத்தில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடந்தது. சோதனை மாலையிலும் நீடித்தது.

கோவையிலும் சோதனை

கோவையில் நேற்று காலை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் கோவைப்புதூரில் உள்ள அவரது அண்ணன் அன்பரசன், ஒப்பந்ததாரரும், அ.தி.மு.க. பிரமுகருமான என்ஜினீயர் சந்திரசேகர், கே.சந்திரபிரகாஷ் ஆகியோர் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.

அப்போது வீட்டில் எஸ்.பி.வேலுமணியின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மட்டும் இருந்தனர். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றதும், வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டினர். வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

வீடு முழுவதும் அங்குலம், அங்குலமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். தொண்டாமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் பண்ணை வீடு, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அலுவலகம் ஆகியவற்றிலும் போலீசார் சோதனை நடந்தினர். இதேபோல் முன்னாள் அமைச்சரின் அண்ணன் அன்பரசன், கோவைப்புதூரில் உள்ள வீட்டில் இருந்தார். அங்கும் சோதனை நடைபெற்றது. இது போல் ஆலயம் அறக்கட்டளை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

அ.தி.மு.க. பிரமுகர்கள் வீடு

மேலும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான என்ஜினீயர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வீட்டின் அருகே அவர் நடத்தி வரும் அறக்கட்டளை நிறுவனத்திலும் சோதனை நடந்தது.

சந்திரசேகருக்கு சொந்தமான குளத்துப்பாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவித்துருவி சோதனை நடத்தினார்கள்.

மதுக்கரை நகர அ.தி.மு.க. செயலாளரும், எஸ்.பி.வேலுமணியின் உறவினருமான சண்முகராஜா வீடு மற்றும் புலியகுளத்தில் உள்ள கே.சி.பி. அலுவலகம், எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகள் உள்பட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

கோவை நகரில் 24 இடங்களிலும், வடவள்ளி, தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 11 இடங்கள் உள்பட மொத்தம் 41 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.

அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு

எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடைபெறுவது பற்றிய தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், தாமோதரன், அமுல் கந்தசாமி ஆகியோர் சென்றனர். மேலும் அங்கு அ.தி.மு.க. தொண்டர்களும், மகளிர் அணியினரும் திரண்டு வந்தனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்த போலீசாரிடம் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். ஆனால் அதை மீறி எம்.எல்.ஏ.க்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

அப்போது போலீசார் தடுப்புகளை வைத்தனர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அ.தி.மு.க.வினர் தடுப்புகளை தூக்கிக்கொண்டு வேறு இடத்தில் கொண்டு போய் போட்டனர். மேலும் எஸ்.பி.வேலுமணியின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் குவிந்து சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் தலைமையில் 600 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சந்திரபிரகாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி

கே.சி.பி. நிறுவன உரிமையாளர் சந்திரபிரகாஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்ற போது, சந்திரபிரகாஷ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

உடனே அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

லாக்கர் சாவி சிக்கியது

கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் காலை முதல் மாலை வரை மொத்தம் 11 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் லாக்கர் சாவி மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து கணினி டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

சென்னையில் ரூ.13 லட்சம் சிக்கியது.

Next Story