நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்கள்: 8 வாரங்களுக்குள் நிரப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 Aug 2021 7:46 PM GMT (Updated: 2021-08-12T01:16:19+05:30)

நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்களை 8 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி, 

மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.எப். நரிமன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குக்கு உதவ மூத்த வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், ஆதித்யா நாராயணன் ஆகியோரை கடந்த ஜனவரி 30-ந் தேதி நியமித்தது.

மேலும் நாடு முழுவதும் நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்களை கேட்டு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் காலி பணியிடங்களை 8 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் நிரப்ப வேண்டும். நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட விதிகளை அறிவிக்காத மாநிலங்கள் 2 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும். அறிவிக்க தவறும் பட்சத்தில் மத்திய அரசின் மாதிரி விதிகள் மாநிலங்களுக்கு பொருந்தும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story