தமிழக நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்?


தமிழக நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்?
x
தினத்தந்தி 13 Aug 2021 9:08 PM GMT (Updated: 13 Aug 2021 9:08 PM GMT)

தமிழக நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து, சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன் என்பது பற்றி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத்தொடங்கியதும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அதை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.

வெளிநடப்பு செய்தது ஏன் என்பது பற்றி சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

தீர்வுகாணாத நீட் தேர்வு

சட்டசபை தேர்தலின்போது நடத்த முடியாத 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ‘ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நான் போடும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான்’ என்று முதல்-அமைச்சர் கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை.

நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரையும் மாணவர்கள் படித்து தயாராகுங்கள் என்று அவர்களுக்கு தெளிவான அறிவுரையையும் அரசு வழங்கவில்லை. இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு ரத்து தொடர்பாக தீர்வு காணப்படாததை கண்டிக்கிறோம்.

விளம்பரம் தேடும் முயற்சி

நிதித்துறை அமைச்சர் சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு கூறியுள்ளதையே அவர் ஒட்டுமொத்தமாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், 14-வது நிதிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வரி வருவாயில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு என்றும், ரூ.25 ஆயிரம் கோடி திட்ட நிதி, முறையான பயனாளிகளுக்கு செல்லவில்லை என்றும் தவறான கருத்தை கூறியுள்ளார்.

14-வது நிதிக்குழு குறிப்பிட்டுள்ள வரி, உத்தேச மதிப்பீடுதான். அது வசூலிக்கப்பட வேண்டிய வரி ஆகாது. செலவு பற்றியும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

எனவே வெள்ளை அறிக்கை என்பது விளம்பரம் தேட எடுத்த முயற்சிதானே தவிர வேறல்ல.

காழ்ப்புணர்ச்சி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போடுவதை கடுமையாக கண்டிக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள இந்த சூழ்நிலையில் இப்படி பொய் வழக்கு போட்டு வேகத்தடை போட தி.மு.க. பகல் கனவு காண வேண்டாம்.

பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். சட்டப்படி அதை எதிர்கொள்வோம். உண்மைக்கு புறம்பாக வழக்கு போட்டு பழிவாங்கும் எண்ணத்துடன் செயல்படும் தி.மு.க. அரசை கண்டிக்கிறோம்.

கடந்த 9-ந் தேதியன்று அ.தி.மு.க.வின் நாளிதழான நமது அம்மா அலுவலகத்தின் பூட்டை உடைத்து காவல்துறையினர் சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம்.

மேற்கூறிய இந்த காரணங்களுக்காக தி.மு.க அரசை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

சுய விளம்பரம்

எங்கள் ஆட்சியில் இருந்த அதே நிதித்துறை செயலாளர்தான் இப்போதும் இருக்கிறார். அவர் எங்களுக்கு அளித்த புள்ளிவிபரங்களைத்தான் நாங்கள் பேசுகிறோம். அவர்களும் அதைத்தான் பேசுகின்றனர். எனவே பெரிய குறையை சொன்னதாக தெரியவில்லை. சுய விளம்பரம் தேடுவதற்காக வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

உரிய பதில்

நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “வெள்ளை அறிக்கையில் வெளியிட்டுள்ள ஒவ்வொரு கருத்துக்கும் பதில் தரப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நான் சொன்ன பதில்கள் மற்றும் அதில் சொல்லாத சில விவரங்களையும், மத்திய-மாநில அரசுகளின் நிதி மேலாண்மை பற்றியும் விவரமாக, விளக்கமாக உரிய பதிலை உரிய நேரத்தில் சட்டசபையில் அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டார்.

Next Story