மேகதாதுவில் அணை கட்ட அறைகூவல்: பசவராஜ் பொம்மைக்கு ம.தி.மு.க. கடும் கண்டனம்


மேகதாதுவில் அணை கட்ட அறைகூவல்: பசவராஜ் பொம்மைக்கு ம.தி.மு.க. கடும் கண்டனம்
x
தினத்தந்தி 15 Aug 2021 2:47 AM GMT (Updated: 15 Aug 2021 2:47 AM GMT)

மேகதாதுவில் அணை கட்ட அறைகூவல் விடுத்துள்ள கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடும் கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

ம.தி.மு.க.வின் நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* திராவிட இயக்கத்தின் ஆணி வேரான நீதிக்கட்சி, சென்னை மாகாணத்தில் 1921-ம் ஆண்டு ஜனவரி திங்களில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி தொடங்கிய 100-வது ஆண்டில், 2021 மே 7-ம் நாள் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் இக்கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறது.

பசவராஜ் பொம்மைக்கு கண்டனம்

* கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும், அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பாராட்டுகளையும், நன்றியையும் உரித்தாக்குகிறது.

* சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மற்றும் அரசு அமைப்பு சட்ட நெறிமுறைகள், நீர்பங்கீட்டு சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று அறைகூவல் விடுத்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசின் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

ரூ.3 பெட்ரோல் வரி குறைப்புக்கு பாராட்டு

*பெகாசஸ் உளவு குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்ட தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பா.ஜ.க. அரசு, நாடாளுமன்ற கூட்ட தொடரையே செயல் இழக்க செய்து விட்டது. உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் மோசமான உளவு வேலையில் ஈடுபட்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

* விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, விற்பனை விலையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைத்து இருப்பதற்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story